சினிமா செய்திகள்

ஏக் தின் – விமர்சனம்

இயக்குநர் ஒரு மென்மையான காதல் கதையை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சி செய்துள்ளார்.

மாலை மலர்

தனது அலுவலகத்தில் பணிபுரியும் சாய் பல்லவியை மனதார காதலித்து வந்தாலும், அதை வெளிப்படுத்த தைரியம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஜுனைத் கான். சாதாரணமான வாழ்க்கையில் யாராலும் கவனிக்கப்படாத ஒருவராக இருக்கும் அவர், ஒரு நாள் தனது ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறார். அதன்படி, சாய் பல்லவியுடன் ஒரு நாள் முழுவதும் செலவிடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது.

அந்த நாளை ஜுனைத் கான் எப்படி தன்னுடைய நாளாக மாற்றினார்? ஒரு நாள் ஜுனைத் கான் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? என்பதே படத்தின் கதை.

நாயகனாக நடித்துள்ள ஜுனைத் கான் அமைதியான மற்றும் தன்னம்பிக்கை குறைந்த இளைஞனின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்துள்ளார். பெரிய அளவில் மாஸ் காட்சிகள் எதுவும் இல்லாமல், எளிமையான நடிப்பால் கதையை தாங்கிச் செல்கிறார்.

நாயகியாக நடித்துள்ள சாய் பல்லவி, தனது இயல்பான நடிப்பால் படத்திற்கு முக்கிய பலமாக இருக்கிறார். உணர்ச்சி காட்சிகளிலும், மென்மையான காதல் தருணங்களிலும் வழக்கம்போல நம்ப வைக்கிறார். இது அவரின் இந்தி அறிமுகப்படமாகவும் அமைந்துள்ளது.

இயக்குனர் சுனில் பாண்டே, ஒரு மென்மையான காதல் கதையை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சி செய்துள்ளார். காதல், ஏக்கம், இழப்பு, வாழ்க்கையின் மதிப்பு போன்ற உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்கிறார். சில இடங்களில் கதை மெதுவாக நகர்ந்தாலும், அதுவே படத்தின் மனநிலைக்கு ஏற்றதாக அமைகிறது.

மனோஜ் லோபோவின் ஒளிப்பதிவு பெரிய பலம். குறிப்பாக ஜப்பானின் பனிமூட்டமான காட்சிகள் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இசையமைப்பாளர் ராம் சம்பத் இசை, படத்தின் உணர்ச்சியை உயர்த்த உதவுகிறது.

ஆனால், கதை சில இடங்களில் முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக மாறுகிறது. விறுவிறுப்பான திருப்பங்கள் எதிர்பார்ப்பவர்களுக்கு இது மெதுவான அனுபவமாக இருக்கலாம்.