துல்கர் சல்மான் தனது தனித்துவமான நடிப்பால் மற்றும் வித்தியாசமான கதைகளின் தேர்வால் தென்னிந்திய திரையுலகில் இருந்து இந்திய அளவிலான முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். அவரது சமீபத்திய படங்கள், குறிப்பாக 'சீதா ராமம்' மற்றும் 'லக்கி பாஸ்கர்', உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று, அவரின் வெற்றிப் பயணத்தை மேலும் உயர்த்தியுள்ளன.
மலையாள திரை உலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய மொழிகளை கடந்து இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் நடிகராக வளர்ந்து இருக்கிறார் துல்கர் சல்மான். மம்மூட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் திரை உலகில் நுழைந்தாலும், தனது தனித்துவமான நடிப்பாலும், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் திறமையினாலும் சமீபகாலமாக அவர் தொடர் வெற்றியை கண்டு வருகிறார்.
அவரது சினிமா பயணத்தில் பெங்களூரு டேஸ், சார்லி, குரூப், சீதா ராமம் போன்ற படங்கள் வெற்றி படிக்கட்டுக்களாக அவருக்கு அமைந்தன. சீதா ராமம் படம் மொழிகளை கடந்து ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஒரு வங்கியில் பணியாற்றும் சாதாரண ஊழியராக தொடங்கி பணம் சம்பாதிக்கும் ஆசையால் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் கேரக்டரில் துல்கர் சல்மான் நடித்து இருந்தார். இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று உலகளவில் ரூ.110 கோடி வசூலை பெற்றது. இதை தொடர்ந்து தயாரிப்பாளராகவும் களம் இறங்கி அவரது தயாரிப்பில் வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா படம் திரைக்கு வந்து ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று சாதனை படைத்தது.
கல்யாணி பிரியதர்ஷன் படத்தில் சூப்பர் ஹீரோயினாக நடித்து இருந்தார். இந்த படம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. துல்கர்சல்மான் நடிகராக மட்டுமில்லை. நல்ல கதைகளை அடையாளம் கண்டு தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்து இருக்கிறார் என பாராட்டை பெற்றார். இதற்கடுத்ததாக தான் ‘ஐம் கேம்’ போன்ற படங்கள் ஓரளவு வெற்றி பெற்றது.
இந்நிலையில் துல்கர்சல்மான் நடிப்பில் ஏ.ஓ.டி. படம் நேற்று திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. துல்கர்சல்மானின் தொடர் வெற்றி திரை உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.