மலையாளம், தமிழ், தெலுங்கு என பான்-இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.08 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுதாஹர் செருகுரியின் புகழ்பெற்ற 'SLV சினிமாஸ்' தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படத்தை வளர்ந்து வரும் இளம் திறமையான இயக்குநர் ரவி நெலகுடிதி இயக்குகிறார். தீவிரமான மனித உணர்வுகள் மற்றும் எமோஷன்கள் கலந்த ஒரு சமகாலத்து காதல் கதையாக இத்திரைப்படம் செதுக்கப்பட்டு வருகிறது. ஆந்திரப் பின்னணியில் இந்த காதல் காவியம் அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகையான பூஜா ஹெக்டே முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். இவர்களின் புதிய ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி இந்தப் படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு மற்றும் தீக்ஷித் ஷெட்டி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் தற்சமயம் டாப் ஃபார்மில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படக்குழுவினர் பனி படர்ந்த மலைப்பகுதிகளில் தங்களின் முக்கிய முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தனர். அதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
துல்கர் சல்மானின் 14 ஆண்டுகால சினிமா பயணத்தில், இந்த 'DQ41' திரைப்படம் அவரது மிகச்சிறந்த காதல் காவியமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாளை காலை 10.08 மணிக்கு வெளியாகவுள்ள டைட்டில் என்னவாக இருக்கும் என்ற விவாதங்கள் இப்போதே இணையத்தில் ட்ரெண்டாகத் தொடங்கிவிட்டன.