சினிமா செய்திகள்

Prakash Raj | த்ரிஷ்யம் 3 இந்தி பட அப்டேட் கொடுத்த பிரகாஷ் ராஜ்

இந்தப் படத்திற்கான தனது பகுதிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லால் நடித்து வெளியாகி இருக்கும் 'த்ரிஷ்யம் 3' சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜய் தேவ்கன் நடிக்கும் இதன் இந்தி ரீமேக் இந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதியன்று வெளியாக இருக்கிறது. த்ரிஷ்யம் 3 இந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்த திரில்லர் படத்தின் இந்தி பதிப்பிற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது தெரிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இது குறித்து பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தப் படத்திற்கான தனது பகுதிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த பதிவில் அவர், "த்ரிஷ்யம்3 இந்தி... ஒரு அற்புதமான குழுவுடன் ஒரு அருமையான படப்பிடிப்பை இப்போதுதான் முடித்தேன். இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததை முழுமையாக ரசித்தேன். நீங்களும் இதை விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன். அடுத்த படத்திற்குச் செல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 'த்ரிஷ்யம் 3'-இன் இந்தித் தழுவல், மோகன்லால் நடித்த மலையாள அசல் படத்தின் காட்சிக்குக் காட்சி ரீமேக்காக இருக்காது என்று இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தெளிவுபடுத்தி இருந்தனர். இரு படங்களும் த்ரிஷ்யம் 2 படத்தின் நிகழ்வுகளில் இருந்து கதையை தொடர்ந்தாலும், இந்தி பதிப்பில் அதன் திரைக்கதை, கதை சொல்லும் பாணி மற்றும் காட்சிப்படுத்தலில் பல முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.