கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'கருணாட சக்ரவர்த்தி' டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய தலைமுறை பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு 'பிக்காசோ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பிக்காசோ படத்தின் அதிரடியான மற்றும் கலைநயமிக்க ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பழம்பெரும் நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமாரின் தனித்துவமான மிரட்டலான திரை ஆளுமையுடன், அடுத்த தலைமுறை கலைஞரான அபிஷன் ஜீவிந்த்தின் புதிய தலைமுறை நடிப்புத் திறனும் இதில் இணையவுள்ளது.
இரண்டு வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இரு முன்னணி நடிகர்களின் இந்தத் திரை விந்தையானது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வழக்கமான பாணியில் இல்லாமல் மிகவும் வித்தியாசமான காட்சியமைப்புடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டாக்டர் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்துச் சிதறிய பட்டாசுகளின் நடுவே மாஸாக அமர்ந்திருக்கிறார்கள்.
இருவரின் இயல்பான, அதே சமயம் குறும்புத்தனமான தோற்றமும், அவர்களைச் சுற்றியுள்ள வெடித்த பட்டாசுகளும் படத்திற்கு ஒரு மாறுபட்ட சூழலை உருவாக்குகிறது.
படத்தின் 'பிக்காசோ' என்ற தலைப்பு மஞ்சள் நிற எழுத்துக்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ஒரு தனித்துவமான கலைநயமிக்க தோற்றத்தை வழங்குகிறது. இந்த போஸ்டர் படத்தின் கதை முற்றிலும் புதியதொரு அணுகுமுறையில் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
இப்படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், தமிழ் திரையுலகின் பிரபல சுயாதீன பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு கவுதம் சிவராமன் கதை எழுதி இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் இப்படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.
இவர்களுடன் ஆர். கார்த்திகேயன், தினேஷ் பாலச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர். தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
மேலும், கிரீன் காட் மற்றும் டி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் இணைந்துள்ளன.
இப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.