சினிமா செய்திகள்

'டோரதி' வெற்றி விழா: ரிஷிகாந்த் மற்றும் சனந்தை எச்சரித்த இயக்குனர் மிஷ்கின் !

தயவுசெய்து ரசிகர் மன்றங்களை ஆரம்பித்து உங்களை நீங்களே ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றிக் கொள்ளாதீர்கள் - மிஷ்கின்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள 'டோரதி' திரைப்படத்தின் வெற்றி விழாவில், படத்தின் கதாநாயகர்களான ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோருக்கு இயக்குனர் மிஷ்கின் மிக முக்கியமான எச்சரிக்கையையும் அறிவுரையையும் வழங்கியுள்ளார்.

வெற்றிப் பாதையில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்ட பலர் இருந்தாலும், அதன் ஆபத்துகளைப் பற்றி எச்சரிப்பவர்கள் சிலரே. அந்த வகையில் இந்த விழாவில் மிஷ்கின் பேசிய பேச்சு தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

"நீங்கள் ஆபத்தான இடத்தில் இருக்கிறீர்கள்" - மிஷ்கின் எச்சரிக்கை

விழாவில் பேசிய மிஷ்கின், "ரிஷி, சனந்த்... நீங்கள் இருவருமே இப்போது ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறீர்கள். சினிமாவில் 200 பேரை அடித்து துவம்சம் செய்தோ, நான்கு பெண்களுடன் டூயட் பாடியோ அல்லது பெற்றோரின் பெருமைகளைப் பற்றி அடுக்கு மொழியில் வசனம் பேசியோ ஒருவரால் ஹீரோவாகி விட முடியும். ஆனால், நீங்கள் இருவரும் அந்த வழக்கமான சினிமா டெம்ப்ளேட்டை உடைத்து, திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் உண்மையான ஹீரோக்களாக மாறியிருக்கிறீர்கள்" என்று பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "உங்களுக்கு இப்போது ஒரு பெரிய பொறுப்பு வந்துள்ளது. தயவுசெய்து ரசிகர் மன்றங்களை ஆரம்பித்து உங்களை நீங்களே ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றிக் கொள்ளாதீர்கள்" என்று இருவரையும் எச்சரித்தார்.

பிசாசை தொடரும் தேவதை

டென்சல் வாஷிங்டனின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய மிஷ்கின்

கடந்த 2022 ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவத்திற்குப் பிறகு, பிரபல ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டன் கூறிய வார்த்தைகளை மிஷ்கின் மேடையில் நினைவு கூர்ந்தார்.

தேவதை வரும்போது, அதைத் தொடர்ந்து பிசாசும் வரும் என்று வில் ஸ்மித்திடம் டென்சல் வாஷிங்டன் கூறினார். தீமை என்பது அப்படித் தான் திடீரென்று நுழையும். நீங்கள் செய்யும் செயல்களின் தாக்கம் இப்போது உங்களுக்குத் தெரியாது, ஆனால் அடுத்த தலைமுறை அதை உணரும். இந்த வன்மையான கதைக் களத்தைக் கொண்ட திரைப்படத்தில் நடித்த உங்கள் தைரியத்தைக் கண்டு அடுத்த தலைமுறை பெருமைப்படும்,"என்று மிஷ்கின் பேசினார்.

'டோரதி' திரைப்படம் பற்றி...

இரு உயிர் நண்பர்களின் வாழ்க்கையில் ஒரு பெண்ணின் வருகைக்குப் பின் ஏற்படும் திருப்புமுனைகளையும், அவர்களது வாழ்நாள் பயணத்தையும் மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் உலக அளவில் பிரீமியர் செய்யப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT