சினிமா செய்திகள்

நயன்தாரா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி: அமைச்சருடன் இயக்குனர் விக்னேஷ்சிவன் ஆலோசனை

பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.பிரபல திரைப்பட நடிகர், நடிகைகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maalaimalar

புதுச்சேரி:

திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ்சிவன் நேற்று இரவு 7 மணிக்கு புதுச்சேரி வந்தார். புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்ற அவர் அங்கு சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான `சீகல்ஸ்' ஓட்டலை விலை பேசினார். இதனை கேட்ட அமைச்சர் லட்சுமி நாராயணன் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்த அவர் விக்னேஷ் அது அரசு சொத்து என்றார். உடனே விக்னேஷ் சிவன், சீகல்ஸ் ஓட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா? என கேட்டார்.

அதற்கு அமைச்சர் புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சீகல்ஸ் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணிசெய்து வருகிறார்கள். அதனை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது' என்றார்.

தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், புதுச்சேரியில் கடற்கரை பகுதிகள் தனியார் வசம் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றாவது கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு, புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரைகள் கடந்த 2017-ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதன் பின்னர் விக்னேஷ் சிவன், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே கலை நிகழ்ச்சி நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா? என்று அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டார்.

அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுது போக்கு மையம் ஒன்றை கட்டி வைத்துள்ளோம். அங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க முடியும், அதற்கு அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்துடன், ஜி.எஸ்.டி. சேர்த்து செலுத்தினால் போதும். நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம்' என்றார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த விக்னேஷ் சிவன் பின்னர் சட்டசபை வளாகத்தில் இருந்து புறப்பட்டு துறைமுக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

நயன்தாராவின் கணவர் விக்னேஷ்சிவன் புதுச்சேரியில் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வருவதால் அதில் நடிகை நயன்தாரா உள்ளிட்ட பிரபல திரைப்பட நடிகர், நடிகைகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.