இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்நிலையில் 'விடுதலை-2' திரைப்படத்தைக் காண சென்னை காசி திரையரங்கிற்கு இயக்குநர் வெற்றிமாறன் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்கள் அமித் ஷா மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து பேசியது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வெற்றிமாறன், அவர் பேசியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.
முன்னதாக பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "எதிர்க்கட்சிகளுக்கு அம்பேத்கர் பெயரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கிறது.
அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்து இருக்கும்" என்று கூறினார். இந்த கருத்துக்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.