தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் ஜேசன் சஞ்சய் படம் குறித்த தனது உணர்வுகளையும் நன்றிகளையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
படம் வெளியாக உள்ள சூழல் குறித்துப் பேசிய ஜேசன் சஞ்சய், "’சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாக இருந்தாலும் சற்று பதட்டமாகவும் இருக்கிறது.
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இப்படம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. திரையரங்குகளில் விறுவிறுப்பான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதற்காக ஒரு குழுவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்," என்றார்.
அறிமுக இயக்குநரான தன் மீது நம்பிக்கை வைத்ததற்காகப் பலருக்கும் சஞ்சய் நன்றி தெரிவித்துள்ளார். "என் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் சுபாஸ்கரன் அவர்களுக்கும், எங்களை முன்னின்று வழிநடத்திய தமிழ்குமரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
என் கதையை நம்பி அர்ப்பணிப்புடன் நடித்த சந்தீப் ப்ரோ (சந்தீப் கிஷன்), ஃபரியா அப்துல்லா, நடிகர் சம்பத் மற்றும் ராஜு மாஸ்டர் ஆகியோருக்கு நன்றி.
ஒரு இயக்குநருக்குச் சிந்தனை ஒத்துப்போகும் ஒளிப்பதிவாளர் அமைவது வரம். அந்த வகையில் கிருஷ்ணன் வசந்துடன் பணியாற்றியதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.
எடிட்டர் பிரவீன் கே.எல். எனக்குப் பெரிய பலம். இசையமைப்பாளர் தமனின் அதிரடியான பீட் படத்திற்கு மேலும் உற்சாகமளித்துள்ளது என்று மிகவும் உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.
படம் அனைத்து எல்லைகளையும் கடந்து ரசிகர்களைக் கவரும் எனக் குறிப்பிட்ட சஞ்சய், "எங்களது ஆக்ஷன் இயக்குநர்களான வெங்கட் மற்றும் ஸ்டண்ட் சில்வா சிறப்பாகப் பணியாற்றி, மையக் கதைக்களத்திற்குப் பெரிய ஆற்றலைச் சேர்த்துள்ளனர்.
சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம். பிராந்திய மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடையும் நோக்குடன் உழைத்துள்ளோம்," என்று கூறினார்.
சினிமா எனும் பிரம்மாண்டமான திறமைக் கடலில், மற்றொரு அறிமுக இயக்குநராக நான் எனது பயணத்தைத் தொடங்குகிறேன். இந்தப் பயணத்தில் ரசிகர்களின் ஆதரவும் வரவேற்பும் எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியம்.
ஒரு படைப்பின் மீதான நம்பிக்கை எப்போதும் பணிவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அந்தப் பணிவுடன் கேட்கிறேன், அக்டோபர் 2-ஆம் தேதி சிக்மா திரைப்படத்தைத் திரையரங்குகளில் கண்டு எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், என ஜேசன் சஞ்சய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.