சினிமா செய்திகள்

வாட்டி வதைக்கும் வெயில்... இயக்குநர் சேரன் - நடிகை அதுல்யா ரவியின் புதிய முன்னெடுப்பு

இவர்கள் எடுத்திருக்கும் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கோடை கால வெப்ப அலையின் காரணமாக தாகத்தால் தவிக்கும் பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் தாகம் தணிக்கும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சென்னை பிரசாத் லேப் வளாகத்திற்கு அருகே , அருணாச்சலம் சாலையில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு இயக்குநரும் , நடிகருமான சேரன் மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினர். இந்நிகழ்வில் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் சேரன் பேசுகையில், '' வெயில் நூறு டிகிரிக்கு மேல் அடித்து உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. அனைவருக்கும் தாகம் எடுக்கிறது. இதனால் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு நீரை அருந்தினால் தான் இந்த உடலால் வெப்பத்தை தாங்க முடிகிறது. இது போன்ற தருணத்தில் நம்முடைய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் வடபழநி சாலிகிராமம் பிரசாத் லேப் வளாகத்திற்கு அருகே தாகத்தால் தவிக்கின்ற மக்களுக்கு, தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை உருவாக்கி இருக்கிறார்கள்.

இன்று 1000 பேருக்கு நீர் மோரை வழங்கி உள்ளனர். மேலும் இந்த சேவை தொடரும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். மக்களுடைய நலன் கருதி அவர்களுடைய தாகத்தை தணிப்பதற்காக இந்த சங்கம் எடுத்திருக்கும் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்,'' என்றார்.

நடிகை அதுல்யா ரவி பேசும் போது, ''அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஆயிரம் பேருக்கு நீர் மோர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்வில் நானும் கலந்து கொண்டிருப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இன்று ஒரு நல்ல நாள். இந்த நல்ல நாளன்று நல்ல விஷயத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

நல்ல எண்ணங்களுடன் தொடங்கப்பட்டிருப்பதால் பலருக்கும் பயன்படும். குறிப்பாக கோடை காலத்தில் தாகத்துடன் நடந்து செல்பவர்களுக்கு இவர்கள் வழங்கும் நீர்மோர் தாகத்தை தணிக்கும். இது பொது மக்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்று மக்களுக்கு நல்லது செய்யும் விஷயங்களில் என்னையும் கலந்து கொள்ள வைத்ததற்காக பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நடித்த குறும்படங்களில் இருந்து இன்று வரை பத்திரிகையாளர்கள் அனைவரும் அவர்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்களை போல் என் மீது அன்பு செலுத்தி வருகிறார்கள். அந்த அன்பிற்கு நன்றி. இவர்கள் இன்னும் நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.