சினிமா செய்திகள்

துரந்தர் 2 – திரை விமர்சனம்

மாலை மலர்

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் ‘துரந்தர் 2’, ஆக்‌ஷன், உளவு நடவடிக்கை, தேசப்பற்று, பழிவாங்குதல் ஆகிய அம்சங்களை கலந்து சொல்லப்பட்ட அதிரடி படம்.

ஜஸ்கிரத் சிங் ராங்கி என்ற இளைஞன், குடும்பத்துக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தால் பழிவாங்கும் பாதையில் செல்கிறான். அதற்குப் பிறகு சிறையில் இருக்கும் அவனை இந்திய உளவுத்துறை அதிகாரி ஒரு ரகசிய மிஷனுக்காக பயன்படுத்துகிறார்.

பாகிஸ்தானுக்குள் தீவிரவாதியாக நுழைந்து, அங்கே தலைவராக உயர்ந்து, எதிரிகளை அழிக்க வேண்டிய பணியை ஏற்கும் அவன், அந்த பயணத்தில் சந்திக்கும் சவால்களும், குடும்பத்துடன் தொடர்புடைய உணர்ச்சிகளும் தான் படத்தின் கதை.

நடிகர்கள்

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரன்வீர் சிங், முழு படத்தையும் தாங்கி நிற்கிறார். ஆக்‌ஷன், உணர்ச்சி, கோபம், தேசப்பற்று ஆகிய எல்லா தருணங்களிலும் வலுவான நடிப்பு கொடுத்திருக்கிறார். ஆர். மாதவன் வரும் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம். சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டவர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

இயக்கம்

முதல் பாகம் வெற்றி பெற்றதால் இந்த பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஒரு அளவுக்கு பூர்த்தி செய்தாலும், முதல் பாகம் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் முதல் அரை மணி நேரம் வேகமாக நகர்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள், பின்னணி இசை, உணர்ச்சி தருணங்கள் அனைத்தும் விறுவிறுப்பாக அமைந்துள்ளன.

ஆனால் கதாநாயகன் பாகிஸ்தானுக்குள் செல்லும் பிறகு, அரசியல் மற்றும் தீவிரவாத பின்னணி அதிகமாக வருவதால் கதை மெதுவாக நகரும் உணர்வு வருகிறது. இடையே வரும் சில திருப்பங்கள் சுவாரஸ்யம் கொடுத்தாலும், திரைக்கதையின் வேகம் ஒரே நிலைமையில் தொடரவில்லை.

இன்டர்வெல் பகுதி விறுவிறுப்பாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் சில நல்ல காட்சிகள் இருந்தாலும், தேவைக்கு அதிகமாக நீளும் காட்சிகள் படத்தின் பிடிப்பை குறைக்கிறது. இயக்குநர் ஆதித்யா தார், குடும்ப உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது நல்ல முயற்சி என்றாலும், அது முழுமையாக மனதில் பதியவில்லை. கிளைமாக்ஸ் பெரிய அளவில் அமைந்திருந்தாலும், அதை சற்று குறைத்திருக்கலாம் என்ற உணர்வு வருகிறது.

ஒளிப்பதிவு & இசை

விகாஷ் நவ்லகா ஒளிப்பதிவும், சஷ்வத் சச்தேவ் இசையும் படத்திற்கு பெரிய பலம். ஆனால், நீளம் அதிகமாக இருப்பதும், சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது படத்தின் பலவீனம்.