'சீயான்' விக்ரம் நடிப்பில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பல ஆண்டுகளாக ரிலீசுக்காகக் காத்திருக்கும் ஸ்பை-த்ரில்லர் திரைப்படமான 'துருவ நட்சத்திரம்' வெளியாவதில் மீண்டும் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தை நாளைக்குள் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், மேலும் 30 நாட்கள் கால அவகாசம் கேட்டு கௌதம் மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 30, 2026 அன்று இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிதிச் சிக்கல்களுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வந்தார். அதன்படி, படக்குழுவினர் 'கொண்டாடுவோம் எண்டர்டெய்ன்மென்ட்' என்ற பெயரில் ஒரு பிரத்யேக வங்கிக் கணக்கைத் தொடங்கி, படம் மூலம் வரும் வருவாயை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அதன் வழியே கடன்காரர்களுக்குச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜூன் 15, 2026-க்குள் படத்தை வெளியிட அனுமதியளித்தார்.
மேலும், சிறந்த முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் ஜூன் 15-க்குள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாவிட்டால், கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கௌதம் மேனனுக்கு தனிநீதிபதி அனுமதி வழங்கியிருந்தார்.
தற்போது, நீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். எனவே, படத்தின் வெளியீட்டை ஜூலை 15, 2026 வரை நீட்டிக்கக் கோரி அவர் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த விண்ணப்பம், உயர் நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்னிலையில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
மறுபுறம், தனிநீதிபதி படத்தை வெளியிட அனுமதித்த உத்தரவை எதிர்த்து, இப்படத்தின் முதலீட்டாளர்களான கே.புன்னியமூர்த்தி மற்றும் கே.பிரேம்குமார் ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் கே.கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜூன் 2 அன்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. தற்போது, கௌதம் மேனனின் கால அவகாச மனு விசாரணைக்கு வரும் அதே திங்கள்கிழமை அன்று, இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பையும் இந்த டிவிஷன் பெஞ்ச் அறிவிக்கவுள்ளது.
2017-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு, நிதி நெருக்கடிகள் மற்றும் சட்டப் போராட்டங்களால் கடந்த 9 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம், இந்த ஜூலை மாதமாவது தியேட்டருக்கு வருமா என்பது திங்கள்கிழமை நீதிமன்றம் அளிக்கும் உத்தரவைப் பொறுத்தே அமையும். கௌதம் மேனன் மற்றும் விக்ரம் ரசிகர்கள் இந்த நீதிமன்றத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.