சமீபத்தில் அறிவிக்கப்பட்ட '72-வது தேசிய திரைப்பட விருதுகள்' குறித்த விவாதங்களும் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னணி இயக்குநர் 'எச்.வினோத்' தனது கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் தனுஷ் தேசிய விருதை வென்றது முற்றிலும் தகுதியானது என்றும், தேசிய விருதுத் தேர்வு முறைகள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் எச்.வினோத் தனது பேட்டியில், தனுஷின் வெற்றி குறித்து கூறியதாவது, "தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிக என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் இந்த அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதியானவர். ஒரு தகுதியான நபருக்கு விருது வழங்கப்படும் போது, 'ஏன் வேறு ஒருவருக்கு கிடைக்கவில்லை?' என்று கேள்வி எழுப்புவது முற்றிலும் தேவையற்றது."
தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறப்புப் நடுவர் விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், விருதுத் தேர்வு குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த எச்.வினோத், தேசிய விருதுகள் "பணத்தால் வாங்கப்படுகின்றன" என்ற கூற்றை எச்.வினோத் முற்றிலும் மறுத்துள்ளார். விருதுகள் வாங்கப்படுகின்றன அல்லது செல்வாக்கால் பெறப்படுகின்றன என்ற செய்திகளை நான் கேள்விப்பட்டதே இல்லை. தேசிய விருதுகளுக்கான தேர்வுமுறை பெரும்பாலும் நியாயமானதாகவே இருந்துள்ளது. என கூறினார்.
நடுவர் குழுவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களே உள்ளனர். விமர்சனங்கள் இருந்தால், அதைத் தேர்வுமுறையை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களின் நோக்கத்தைச் சந்தேகிக்கக் கூடாது.
ஒரு நல்ல படத்தை உருவாக்குவதுடன் பணி முடிந்துவிடுவதில்லை எனக்கூறிய வினோத், "படத்தை தயாரித்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதோடு நமது வேலை முடிவதில்லை. வட இந்தியா உட்பட அனைத்துப் பகுதி மக்களையும் அப்படம் எப்படிச் சென்று அடைகிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதைத் சரியாகக் கொண்டு சேர்ப்பதும் முக்கியம்" எனக் குறிப்பிட்டார்.
ஏற்கனவே தேசிய விருது நடுவர் குழு உறுப்பினரும் நடன இயக்குநருமான கலா மாஸ்டர், தனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் 'ராயன்' படங்களின் உழைப்பைப் பாராட்டியிருந்தார். 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷின் நடிப்புத் திறனைக் கண்டு நடுவர் குழு ஒருமனதாக அவருக்கு சிறப்பு விருது வழங்கிப் பாராட்டியதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தை இயக்கி முடித்துள்ள எச்.வினோத்தின் இந்த கருத்துகள், திரை உலகிலும் சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.