சினிமா செய்திகள்

'ஜெயிலர் 2' வரவேற்பால் தள்ளிப்போகும் 'டெலிவரி பாய்' வெளியீடு

அம்மா- மகன் பாசம், காதல், ஆக்ஷன், காமெடி என ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படத்திற்குத் தேவையான பல்வேறு அம்சங்களும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்த நிலையில், தற்போது பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நானி எழுத்து மற்றும் இயக்கத்தில் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘டெலிவரி பாய்’. Asasi Creations சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லரை சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு வெளியிட்டார்.

நடிகர்கள்

படத்தில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், லியோ சிவக்குமாரின் தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Chaandi talkies சார்பில் லெனின் மாதேஸ்வரன் தயாரிப்பில் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். அசோக்குமார் ராஜ், பிரசன்னா எஸ். குமார் ஆகியோர் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆர்.வசந்தகுமார் படத்தொகுப்பையும், பி. ஜெய் முருகன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைப் பயிற்சியை ஃபீனிக்ஸ் பிரபு மேற்கொண்டுள்ளார்.

டிரெய்லர்

அம்மா- மகன் பாசம், காதல், ஆக்ஷன், காமெடி என ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படத்திற்குத் தேவையான பல்வேறு அம்சங்களும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு இடையே அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும், நகைச்சுவை மற்றும் காதல் தருணங்களும் இடம்பெற்று உள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள் அவனை எந்தப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலையும் டிரெய்லர் ஏற்படுத்தி உள்ளது.

வெளியீடு தள்ளிவைப்பு

இந்த நிலையில் ‘டெலிவரி பாய்’ திரைப்படம் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்த நிலையில், தற்போது பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தலைவர் தரிசனம் தர்ற நேரத்தில் நம்ம டெலிவரி பாய் வேலையைத் தள்ளிவைக்கலாம் தப்பே இல்ல..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் JAILER 2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் அக்டோபர் 23 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த DELIVERYBOY திரைப்படத்தின் வெளியீட்டை நவம்பர் 27ஆம் தேதிக்கு மாற்றியுள்ளோம்.

சினிமாவில் ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் உள்ளது. பல நேரங்களில், நம் DELIVERY BOY படத்தைப் போலவே பல சிறிய படங்களும் பெரிய படங்களோடு வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் JAILER 2 வெறும் படம் மட்டுமல்ல, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு திருவிழாக் கொண்டாட்டம். தமிழ் ரசிகர்கள் இதுவரை ஏங்கிக் கொண்டிருந்த மாபெரும் INDUSTRIAL HIT படம்.

JAILER 2 திரைப்படம் தமிழ் சினிமாவை இந்திய அளவில் வணிக ரீதியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தக் தருணத்தில், நம் DELIVERYBOY படத்தை வெளியிட்டு அதன் வெற்றிக்காகக் காத்திருப்பதைவிட தலைவரின் இந்த வெற்றியை ரசிகர்களோடு ரசிகர்களாக கொண்டாடுவதுதான் சிறந்தது என்று நினைக்கிறோம்.

தலைவரைக் கொண்டாடுவதன் மூலம், தமிழ் சினிமாவைக் கொண்டாடுவோம்...

எங்களது DELIVERYBOY திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் உங்களைச் சந்திக்க வருகிறது. இந்த முடிவைத் திரை ரசிகர்களும், திரையுலக நண்பர்களும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் பரிந்துகொண்டு ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம் என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT