சுமார் 43 கிலோமீட்டர் தூரம் ஓடிய பேருந்திலேயே இந்த கொடூரம் அரங்கேறிய பிறகு, வடக்கு டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதி அருகே சிறுமியை அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாலிவுட் பிரபல நடிகை பூமி பெட்னேகர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடும் கண்டனத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள பரி சௌக் பகுதியில் இருந்து நொய்டா செக்டர் 63-க்கு செல்வதற்காக கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு 16 வயது சிறுமி ஒருவர் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, அதன் ஓட்டுநரும் நடத்துநரும் இணைந்து அச்சிறுமியை ஓடும் பேருந்திலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சுமார் 43 கிலோமீட்டர் தூரம் ஓடிய பேருந்திலேயே இந்த கொடூரம் அரங்கேறிய பிறகு, வடக்கு டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதி அருகே சிறுமியை அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையின் காஷ்மீரி கேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையை முடுக்கிவிட்ட காவல்துறை, கான்பூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் குல்தீப் (39) மற்றும் நடத்துநர் சந்தீப் (26) ஆகிய இருவரையும் சில மணி நேரங்களிலேயே திமார்பூர் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து கைது செய்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான செய்தியைப் பகிர்ந்த நடிகை பூமி பெட்னேகர், "மீண்டும் மீண்டும் மீண்டும் இதே கொடூரம் நடப்பதை நாம் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? வெட்கக்கேடு!" என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து நாடு தொடர்ந்து பேசி வரும் வேளையில், தலைநகரிலேயே இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது குறித்து அவர் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
பேருந்து பயணித்த 43 கிலோமீட்டர் தூர பாதையில் காவல்துறையின் சோதனைச் சாவடிகள், தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் செயல்படும் நிலையில் இருந்தனவா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.