சினிமா செய்திகள்

'DC' திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் – ரிலீஸ் தேதி மாற்றம்!

இப்படத்திற்கு "தி பிளடி வேலண்டைன்" என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னணித் தமிழ்த் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் 'DC' திரைப்படத்தின் தணிக்கை விவரங்கள் மற்றும் புதிய உலகளாவிய ரிலீஸ் தேதியைத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தணிக்கைக் குழுவின் அதிரடி 'A' சான்றிதழ்!

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டு, இதற்கு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. 'ராக்கி', 'சாணிக் காயிதம்' போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அவரின் வழக்கமான பாணியில், ரத்தம் தெறிக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும், வன்முறைகளும் நிறைந்துள்ளதால் தணிக்கைக் குழு இந்தச் சான்றிதழை வழங்கியுள்ளது.

ரிலீஸ் தேதி மாற்றம்..

முன்னதாக இத்திரைப்படம் ஜூலை 31 அன்று வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 7 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

மாற்றத்திற்கான காரணம்..

நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படமான 'ஜன நாயகன்' திரைப்படம் ஜூலை 23 அன்று திரைக்கு வரவுள்ளதால், வசூலை பாதிக்காத வகையிலும், தியேட்டர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கவும் 'DC' மற்றும் சில முக்கியமான தமிழ் படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

'தி பிளடி வேலண்டைன்' – படத்தின் கதைக்களம்..

DC படத்திற்கு "தி பிளடி வேலண்டைன்" என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. கிளாசிக் காவியமான 'தேவதாஸ்' கதையை முற்றிலும் ஒரு நவீன கேங்க்ஸ்டர் காதல் டிராமா பாணியில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உருவாக்கியுள்ளார்.

இதில் லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா காபி 'சந்திரா' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனிருத்தின் மிரட்டலான இசை..

இப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற 'ராகா ஆப் ரிவெஞ்ச் ' மற்றும் 'ஹேங்கோவா' ஆகிய பாடல்கள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.