கடந்தாண்டு பாமக நிறுவனர் ராமதாஸின் சுயசரிதைப் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அந்த சுயசரிதைப் படத்தை இயக்குநர் சேரன் இயக்கவிருப்பதாகவும், நடிகர் ஆரி ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியிடப்பட்டன. ஆனால் அதன்பின் அப்படம் குறித்த எந்த தகவல்களும் வெளிவரவில்லை. இதுதொடர்பான கேள்விக்கும் நடிகர் ஆரி, இயக்குநர் சேரன் அப்டேட்டுகளை வெளியிடுவார் என தெரிவித்திருந்தார்.
இருப்பினும் படம் தொடர்பாக எந்தத் தகவல்களும் வெளிவராமல் படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டது தொடர்பாக இயக்குநர் சேரன் பேசியுள்ளார்.
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ஒன் மேன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ராமதாஸின் படம் தொடர்பாக பேசிய சேரன்.,
“ராமதாஸ் படத்திற்கு எனக்கு முன்னால் கதை எழுத அமர்ந்தவர் சங்ககிரி ராஜ்குமார்தான். அவர்தான் படத்தை இயக்கியிருக்க வேண்டியது. சில காரணங்களால், தயாரிப்பாளர்கள் என்னை அணுகினார்கள்.
அப்போது ராஜ்குமார் நிறைய குறிப்புகளை எழுதி வைத்துள்ளதாகவும், அதை நான் எடுத்துக்கொள்ளும்படியும் கூறும்போது எனக்கு ஒரு நெருடல்.
அவர் எடுக்கவிருக்கும் படத்தை, அவர் எடுக்க வேண்டும் என்று நினைத்து எழுதிய படத்தை நான் ஏன் எடுக்க வேண்டும் என்று சொல்லி, நான் ராமதாஸிடம், “தம்பி எடுக்கட்டும், நான் வேணா கூட இருந்து ஆதரவு தருகிறேன். ஏனென்றால், அவருக்கு ஒரு கனவு இருந்திருக்கும், அவருக்கு ஒரு அடையாளம் வேண்டும். அவர் மிக அழகாக அந்தக் கதையைத் தொகுத்திருப்பார்.
அப்போது அதைப்போய் நான் எடுத்தால், அவர் உழைப்பைத் தட்டிப்பறித்தது போல் இருக்கும்” என்று அவரிடம் சொன்னேன்.
அவர்கள் பின்னர் பேசிவிட்டு, “இல்லை, இந்தக் கதை இன்னும் சிறப்பாக வர வேண்டும், இப்படி வர வேண்டும், அப்படி வர வேண்டும்” என்று தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியபோது, நான் ராஜ்குமாரைக் கூப்பிட்டு, “தம்பி, என்னால் மறுக்க முடியவில்லை, வேறு வழியில்லை.
பெரியவர்கள் கேட்கும்போது அதை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வரும் அளவுக்கு அவர்களது அன்பை உதாசினப்படுத்த முடியாது. வேறு வழியில்லாமல் நான் ஒப்புக்கொள்கிறேன் தம்பி” என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவனுக்கு என் மீது வருத்தம் இருந்தது.
ஆனால் இப்போது அந்தப் படம் உனக்கும் இல்லை, எனக்கும் இல்லை என்றாகிவிட்டது. அந்தப் படத்திற்காக இவரது உழைப்பு 2 வருடம், என்னுடைய உழைப்பு கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் வீணானது.
நாங்கள் ஒரு 15 பேர் கொண்ட குழுவாகச் சென்று, இடங்களைப் பார்த்து, படப்பிடிப்புத் தளங்களைத் தேடி, எத்தனையோ இடங்களுக்கு அலைந்து, காடுகளையும் மேடுகளையும் கடந்து ஊர்களை கண்டுபிடித்தோம்.
காரணம் அது 1987-ஆம் ஆண்டு காலத்து வரலாறு. 1987-லிருந்து நடந்த சம்பவங்களை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். இப்போது அந்த கிராமங்களைத் தேடினால், 2026-ஆம் ஆண்டில் 1987-ன் காலத்து கிராமங்களை எங்கே போய் தேடுவது?
தமிழ்நாடு முழுவதும் அலைந்து அந்தக்காலத்து கிராமங்களையும், சாலைகளையும் கண்டறிந்து, அப்போதைய மனிதர்களைப் போன்ற தோற்றமுடைய ஆட்களைக் கண்டுபிடித்தோம். காரணம் அந்த காலத்து ஆட்களின் தோற்றம் என்பது வேறு. இப்போது அதுபோல யாரும் இல்லை.
அதனைவைத்து ஒன்றரை வருடமாக தகவல்களை திரட்டி வைத்திருந்தால், அந்தப் படம் நடக்கவில்லை. இது எவ்வளவு பெரிய வலி. அவர்கள் வேண்டுமானால் சொல்லலாம், “நாங்கள் உங்களுக்கு அந்தப் பணி செய்த வரைக்கும் சம்பளம் கொடுத்துவிட்டோமே” என்று. ஆனால் எங்களுக்குத் தேவை சம்பளம் அல்ல, நான் எடுத்தப் படம் வெளியே வரவேண்டும்.
ஆனால் அது நடக்கவில்லை, நின்றுவிட்டது. அதற்கு காரணம் என்ன அப்பா-மகன் சண்டை போட்டனர், படம் நின்றுவிட்டது. இப்போது அப்பா- மகனும் சேர்ந்துவிட்டார்கள், ஆனால் படம் எடுக்க ஆளில்லை. என்ன செய்வது?
இதுதான் சினிமாத் துறையின் அவலம். அதுபோலத்தான் சினிமா என்பது எங்கு நம்மைத் தூக்கி நிறுத்தும், எங்கு நம்மை ஏமாற்றும், எங்கு நம்மை உட்கார வைக்கும் என்று யாருக்கும் தெரியாது.” என சேரன் தெரிவித்தார்.