சினிமா செய்திகள்

சாருகேசி- திரை விமர்சனம்

உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இசை, கதையின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.

Maalaimalar

கதை

கர்நாடக இசை உலகில் மிகப்பெரிய புகழ்பெற்ற பாடகராக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், வயது முதிர்வின் காரணமாக அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகிறார். நாளுக்கு நாள் அவரது நினைவுகள் மங்கத் தொடங்க, குடும்பத்தினரும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள்.

இதற்கிடையே, தந்தையின் இசை மரபிலிருந்து விலகி தனக்கென ஒரு வாழ்க்கையை தேர்வு செய்து வாழும் அவரது மகனுக்கும், ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இடையே பல வருடங்களாக மனக்கசப்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், நோயின் தாக்கத்தால் குடும்ப உறவுகள் புதிய திருப்பத்தை சந்திக்கின்றன.

இறுதியில் தந்தை - மகன் இடையேயான பிளவு சரியானதா? குடும்பத்திற்குள் மறைந்து கிடக்கும் காயங்கள் ஆறினவா? இசை மீண்டும் அவர்களை ஒன்றிணைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

கர்நாடக இசைக் கலைஞராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், தனது அனுபவமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். குறிப்பாக அல்சைமர் நோயால் நினைவுகளை இழந்து தவிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு மனதை நெகிழ வைக்கிறது. பல இடங்களில் வசனங்களை விட அவரது முகபாவனைகளே அதிகம் பேசுகின்றன.

சுஹாசினி தனது வழக்கமான இயல்பான நடிப்பின் மூலம் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். குடும்பத்தின் உணர்வுகளை சுமந்து செல்லும் கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். தலைவாசல் விஜய், ராஜ் ஐயப்பா, ரம்யா பாண்டியன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை குறையின்றி செய்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றங்களில் வரும் சமுத்திரக்கனி, மதுவந்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பும் கதையின் முக்கிய தருணங்களுக்கு வலு சேர்க்கிறது.

இயக்கம்

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, அல்சைமர் நோயை வெறும் மருத்துவ பிரச்சனையாக மட்டும் காட்டாமல், அதன் மூலம் குடும்ப உறவுகள், தலைமுறைகளுக்கு இடையேயான புரிதல் மற்றும் மனிதர்களின் உணர்வுகளை பேச முயற்சித்திருக்கிறார்.

எந்தவிதமான செயற்கைத் தனமும் இல்லாமல், எளிமையான கதை சொல்லும் முறையில் பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துச் செல்கிறார். இறுதிக்கட்ட காட்சிகள் குடும்ப உறவுகளின் அருமையை உணர்த்துவதோடு, பார்வையாளர்களின் மனதையும் தொட்டுச் செல்கின்றன. அதே நேரத்தில், சில இடங்களில் படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

இசை

இசையமைப்பாளர் தேவா, பாடல்களிலும் பின்னணி இசையிலும் தனது அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இசை, கதையின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.

ஒளிப்பதிவு

சஞ்ஜய் ஒளிப்பதிவும் கதையின் உணர்வுகளை அழகாக பதிவு செய்திருக்கிறது.  

SCROLL FOR NEXT