OTT
சினிமா செய்திகள்

OTT தளங்களை தணிக்கை வாரியத்தின் வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

பஞ்சாப் மாநிலத்தின் ஆர்வலர் ஒருவரின் கதையை அடிப்படையாக கொண்ட சட்லஜ் படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) பொதுவாக 'தணிக்கை வாரியம்' என்று அழைக்கப்படுகிறது. திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளிக்கும் முதன்மை அமைப்பாகும். திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிட இதன் ஒப்புதல் கட்டாயமாகும். இருப்பினும், OTT தளங்கள் இதன் வரம்பிற்குள் வராததால், திரைப்பட மற்றும் இணையத் தொடர் (web-series) தயாரிப்பாளர்கள் எவ்வித ஆய்வும் இன்றி இத்தகைய தளங்களில் தங்கள் உள்ளடக்கங்களை வெளியிட முடிகிறது.

இந்த சுதந்திரம் சட்லஜ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு உதவியது. இப்படம், பஞ்சாப் மனித உரிமை ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. 1990-களில் பஞ்சாபில் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதப் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை இப்படம் எடுத்துக்காட்டுகிறது.

சட்லஜ் (Satluj)

முதலில் பஞ்சாப் 95 (Punjab 95) என்று பெயரிடப்பட்ட இப்படத்தில், 127 காட்சிகளை நீக்குமாறு CBFC கோரியதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இறுதியில், ஜூலை 3 அன்று சட்லஜ் என்ற புதிய பெயரில் தணிக்கை செய்யப்படாத பதிப்பை அவர்கள் ZEE5 OTT தளத்தில் வெளியிட்டனர்.

ஆனால், இப்படத்தை ஆன்லைன் தளத்திலிருந்து நீக்குமாறு அரசு உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, ZEE5 தளத்திலிருந்து இப்படம் நீக்கப்பட்டது.

OTT படங்கம் மற்றும் வெப்சீரிஸ் குறித்து அரசு நீண்ட காலமாகவே கவலை தெரிவித்து வந்துள்ளதுடன், அதைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறது. சட்லஜ் (Satluj) திரைப்பட விவகாரத்திற்கு மத்தியில், OTT தளங்களை தணிக்கை வாரியத்தின் வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

OTT தளங்களில் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் போன்றவற்றை வெளியிட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ​​OTT சேவைகள் சுய-கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. மேலும், பார்வையாளர்கள் எந்தவொரு உள்ளடக்கத்தையும் பார்ப்பதற்கு முன் தெளிவான முடிவை எடுப்பதற்கு உதவும் வகையில், வயது வரம்பு குறித்த அறிவிப்புகளை (disclaimers) அவை காட்சிப்படுத்துகின்றன.

தில்ஜித் தோசாஞ்ச் நடிப்பில், ஹனி ட்ரெஹான் இயக்கிய சட்லஜ் (Satluj) திரைப்படம், பஞ்சாப் மனித உரிமை ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியான 48 மணி நேரத்திலேயே இந்தியாவில் நீக்கப்பட்டது. மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இப்படம் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.