சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய பாடகர் கிறிஸ் பிரவுனுடன் சந்திப்பு: BTS உறுப்பினர்கள் RM, J-Hope மீது நெட்டிசன்கள் கோபம்!

தற்போது BTS குழுவினர் தங்களின் 'அரிராங்' ஆல்பத்திற்கான உலகளாவிய இசைப் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற கொரிய இசைக்குழுவான BTS-ன் முன்னணி உறுப்பினர்கள் ஆர்.எம் மற்றும் ஜே-ஹோப், சர்சைக்குரிய அமெரிக்கப் பாடகர் கிறிஸ் பிரவுனின் கச்சேரியில் கலந்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது பெரிதும் கவனிக்க பட்டு வருகிறது

சர்ச்சை வெடித்த பின்னணி

அமெரிக்க பிரபல பாடகர் கிறிஸ் பிரவுன் மீது கடந்த காலங்களில் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளும், பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளும் பதிவாகி பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளார்.

தற்போது, கனடாவில் கிறிஸ் பிரவுன் நடத்திய கச்சேரி ஒன்றிற்கு சென்ற ஜே-ஹோப், அங்கு எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், ஆர்.எம் மற்றும் ஜே-ஹோப் இருவரும் கிறிஸ் பிரவுனுடன் இணைந்து நெருக்கமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டது அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பெண் ரசிகர்களின் ஏமாற்றமும் கொந்தளிப்பும்:

BTS குழுவிற்கு உலகம் முழுவதும் 90 சதவீதத்திற்கும் மேல் பெண் ரசிகைகளே உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றப் பின்னணி கொண்ட ஒருவரை BTS உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டாடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பெண் ரசிகர்கள் குமுறுகின்றனர்.

"நான் BTS-ஐ மனதார நேசிக்கிறேன், ஆனால் இதுபோன்ற தவறான செயல்களுக்கு அவர்களைக் கண்டித்தே தீருவேன், எனக்கு இந்தச் சம்பவம் பெரும் மன உளைச்சலைத் தருகிறது" என ரசிகர்கள் தங்களின் எக்ஸ் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் இவர்களின் பாடல்களைக் கேட்பதையே நிறுத்தப்போவதாகப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஆதரவாகவும் பேச்சு:

மறுபுறம், சில ரசிகர்கள் இவர்களுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். "அவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே கச்சேரிக்குச் சென்றுள்ளனர்.

ஒரு பாடகரின் இசையை ரசிப்பதோ, அவரது கச்சேரிக்குச் செல்வதோ, அவரது கடந்த காலக் குற்றங்களை ஆதரிப்பதாக அர்த்தமாகாது" என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

சுற்றுப்பயணத்தில் பரபரப்பு:

தற்போது BTS குழுவினர் தங்களின் 'அரிராங்' ஆல்பத்திற்கான உலகளாவிய இசைப் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மாதத்தில் ஆர்லிங்டன், டொராண்டோ, சிகாகோ ஆகிய நகரங்களில் இவர்களின் பிரம்மாண்ட கச்சேரிகள் நடக்கவிருக்கும் சூழலில், இந்தச் சர்ச்சை, BTS குழுவின் பிம்பத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்தக் கடுமையான விமர்சனங்கள் குறித்தோ, ரசிகர்களின் பாய்காட் கோரிக்கைகள் குறித்தோ ஆர்.எம் அல்லது ஜே-ஹோப் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.