முதன்முதலாக சினிமா ஆடிஷனுக்குச் சென்ற போது, கடும் கோபமடைந்த என் அம்மா என்னை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்துவிட்டதாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மானுடன் 'காந்தா' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியத் திரை உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். தொடர்ந்து பல மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வரும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணத்தின் ஆரம்பகால தடைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்த போது, என் குடும்பத்தில் இருந்த ஒருவர் கூட அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த முடிவை முதலில் என் அம்மாவிடம் சொன்னேன், அவர் உடனடியாக மறுத்துவிட்டார். சரி என்று அப்பாவிடம் சென்றால் அவரும் சம்மதிக்கவில்லை. கடைசியாக என் சகோதரியாவது என் விருப்பத்தைப் புரிந்துகொள்வார் என்று நினைத்துப் பார்த்தால், அவரும் என் முடிவை எதிர்த்தார். சினிமா உலகம் தங்களின் மகளுக்கு பாதுகாப்பான இடமாக இருக்காது என்று என் பெற்றோர் பயந்ததுதான் இதற்கு முக்கியக் காரணம்.
குடும்பத்தினரின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் கடந்துதான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். நான் முதன்முதலாக சினிமா ஆடிஷனுக்குச் சென்ற போது, கடும் கோபமடைந்த என் அம்மா என்னை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்துவிட்டார். அதுமட்டுமன்றி, 6 மாதங்கள் அவர் என்னிடம் பேசவே இல்லை.
குடும்பத்தினர் எதிர்ப்பை கடந்து சினிமாவில் நடித்தேன். வாழ்க்கையில் யாருக்கும் குற்ற உணர்ச்சி இருக்க கூடாது. உங்களுக்கு என்ன செய்ய தோன்றுகிறதோ அதை செய்யுங்கள் என்றார்.