சினிமா செய்திகள்

பாக்யராஜ் மறைவு: கேரளா முதல்வர் பினராயி விஜயன், பிருத்விராஜ், ஜெயராம் அஞ்சலி!

"அவரது மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகிற்கும், கலாச்சாரத் துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்."

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் திடீர் மறைவு தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரள கலை உலகையும், அரசியல் வட்டாரத்தையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு மலையாள முன்னணி நடிகர்கள் மற்றும் கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன்,

"பிரபல இயக்குநரும், நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான கே.பாக்யராஜின் மறைவு குறித்து எனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தமிழ் ரசிகர்களால் மட்டுமன்றி, தனது சிறந்த படைப்புகள் மூலம் கேரளாவில் உள்ள சினிமா ரசிகர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். அவரது மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகிற்கும், கலாச்சாரத் துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்." என இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாக்யராஜ் இயக்கி, பெரும் வெற்றி பெற்ற 'பாரிஜாதம்' (2006) திரைப்படத்தில் பிருத்விராஜ் தான் கதாநாயகனாக நடித்திருந்தார்."உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ஐயா! உங்களின் இயக்கத்தின் கீழ் நடித்தது, என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு பெருமையாகவும் பாக்கியமாகவும் எப்போதும் இருக்கும். கலை உலகின் உண்மையான ஜாம்பவான் நீங்கள்!" இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

பாக்யராஜுடன் இணைந்து 'துணை முதல்வர்' (2015) உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய நடிகர் ஜெயராம், தனது மனைவி பார்வதியுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவர் ஒரு சிறந்த மனிதர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு மிக நெருங்கிய குடும்ப நண்பராக இருந்தவர். அவரது இயக்கத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது என் வாழ்நாளின் மிகப்பெரிய மகிழ்ச்சி" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.

மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல் தற்போது பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் இந்த ஜாம்பவானுக்கு அஞ்சலி செலுத்த தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ளபடி, அவரது இறுதிச்சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT