தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. மேலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
* தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள புதிய படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ஓஹோ எந்தன் பேபி’ பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. போஸ்டரில் அடையாளம் தெரியாத அளவுக்கு வயதான தோற்றத்துடன் ஜி.டி.நாயுடுவின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதவன் காணப்பட்டார். இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து ‘ஜி.டி.என்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
* அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ள படம் ‘டிசி’. இப்படத்தில் லோகேஷ்க்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘டிசி’ படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், வன்முறை நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக ரசிகர்களை வருகிற 7-ந்தேதி சந்திக்க தயாராகி உள்ளது.
* ‘ரா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஷ்ரப் தற்போது ‘போட்டோகிராபர்’ என்ற படத்தில் நாயகனாக நடித்திருப்பதோடு, அவரே படத்தை இயக்கவும் செய்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். "சைக்காலஜிக்கல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர்" பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. கருணாகரன், ஆடுகளம் நரேன், "உறியடி" சிவா, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய், வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி மற்றும் வெற்றிவேல் ராஜா நடித்துள்ளனர். ரயீஸ் அகமது ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் சந்திரசேகன் இசை அமைத்துள்ளார். ஏபிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். அப்துல் பாசித் தயாரித்துள்ள இப்படம் வருகிற 7-ந்தேதி திரையரங்குகளில் காணலாம்.
* நடிகர் விஷாலின் 35-வது திரைப்படம் ‘மகுடம்’. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரித்துள்ளது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடித்து உள்ளார். மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகர் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களம் என கூறப்படுகிறது. நடிகர் விஷால் இயக்கி உள்ள ‘மகுடம்’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாக உள்ளது.
* 'லக்கி பாஸ்கர்' வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ள படம் 'விஸ்வநாதன் & சன்ஸ்'. சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா, ரவீனா டாண்டன் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
* விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் ‘ஹாய்’. இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாக உள்ளது.
நஹால் ஹிதாயத் இயக்கியுள்ள படம் ‘ஐ எம் கேம்’. இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். துல்கர் சல்மான் நடிக்கும் 40-வது படமான இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோகர், கதிர் பார்க் திவாரி, சம்யுக்தா, விஸ்வநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். வருகிற 20-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா, அனில்கமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்பியா உள்பட பலர் நடித்துள்ளனர். பரத்சங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தபடம் வருகிற 21-ந்தேதி வெளியாக உள்ளது.
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கன்னடத் திரையுலகின் 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘டாக்சிக்’. 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஒரு பக்கா ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக ரிலீஸாகவுள்ள ‘டாக்சிக்’, முன்னதாக கடந்த மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 26-ந்தேதி இப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.