அட்லீ 
சினிமா செய்திகள்

ஊர் வாயை அடைக்க முடியாது; யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள்!- அட்வைஸ் கொடுத்த அட்லீ

நடுவில் சின்ன சின்ன தடைகள் வரத்தான் செய்யும். ஜென்ஸி தலைமுறையினரான நாம் தான் அடுத்து வரப்போகிறோம் என்றார்.

‘பத்தா’ பட விழாவில் அட்லீ, ஊர் பேசுவதை நம்பி வாழ்வது முட்டாள்தனம், இலக்கை நோக்கி செல்வதே முக்கியம் என வலியுறுத்தினார். சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் நேரடியாக பேச வேண்டும் என்றார். அடுத்த தலைமுறை அரசியலில் வலுவாக இருக்கும் நிலையில், இளம் தலைமுறையை விழிப்புணர்வுடன் உருவாக்கியதில் விஜய் அண்ணனின் பங்கு பெரிது என பாராட்டினார்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பத்தா’. படத்தை அட்லி, அவரது மனைவி பிரியா அட்லி, ஸ்டார் ஸ்டூடியோ 18 ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற 1-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. சாய் அபயங்கர் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் அட்லீ பேசியதாவது:-

ஒரே காரணம் விஜய் அண்ணன்

ஊர் வாயை அடைக்க முடியாது. ஊர் ஆயிரம் பேசும். ஊர் வாயில் விழுந்ததை நம்பி நாம் வாழ்ந்துட்டு போவது முட்டாள் தனம் என நினைக்கிறேன். யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள். நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருங்கள். நடுவில் சின்ன சின்ன தடைகள் வரத்தான் செய்யும். ஜென்ஸி தலைமுறையினரான நாம் தான் அடுத்து வரப்போகிறோம். சமூக வலைத்தளங்களில் இவரு அவரை சொல்கிறார், அவர் இவரை சொல்கிறார் என கூற வேண்டாம். சொல்ல வேண்டும் என்றால் நேரடியாக சொல்லி விட்டு போகலாம்.

அரசியலில் அடுத்த தலைமுறையினர் வலுவாக இருப்பார்கள். அதற்கு ஒரே காரணம் விஜய் அண்ணன். நான் அரசியல்வாதியும் அல்ல, நான் அரசியல் பேசுவதும் இல்லை. என் முந்தைய தலைமுறையையும் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது 5 வயது குழந்தைகளும் சட்டசபை நேரலையை காலையில் இருந்து உட்கார்ந்து பார்க்கிறார்கள். வலுவான தலைமுறையினரை விஜய் அண்ணா உருவாக்கி உள்ளார். அதில் சந்தேகமே கிடையாது. அரசியல் எல்லாம் நல்லதல்ல, சரிவராது என்றெல்லாம் முன்பு சொல்வார்கள். ஆனால் அது மாறி உள்ளது. அரசியல் நமக்கானது. அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம், எப்படி பார்க்கிறோம் என்பது நமது மூளையைப் பொறுத்தது என்றார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் அட்லீயின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT