நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் 40-வது திரைப்படமான 'ஹலோ காதல்' படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மலையாளத்தில் கவனம் ஈர்த்த 'பிரணய விலாசம்' படத்தை இயக்கிய நிகில் முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல் மற்றும் தெலுங்குப் படமான 'பேபி' புகழ் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
தி ஷோ பீப்பிள் மற்றும் சில்வர் கிரைன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வந்த ஆர்யா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தனது பழைய பாணியிலான கலகலப்பான ரொமான்டிக் காமெடி கதைக்களத்திற்குத் திரும்பியுள்ளார்.
ஒரு பயணத்தை மையமாகக் கொண்டு நகரும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது என்பதை டிரெய்லர் காட்சிகள் உணர்த்துகின்றன.
காதல், நகைச்சுவை மற்றும் உறவுகளுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான தருணங்களைக் கொண்ட இப்படத்திற்கு இயக்குநர் ஹலிதா ஷமீம் கூடுதல் திரைக்கதை மற்றும் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், டிரெய்லரின் பின்னணி இசையும் கவனம் ஈர்த்துள்ளது. ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்ய, பினு நெப்போலியன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள 'ஹலோ காதல்' திரைப்படம் வருகிற டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.