சினிமா செய்திகள்

உலக அரங்கில் மீண்டுமொரு மகுடம்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு புகழ்பெற்ற 'கோல்டன் பிளேட்' விருது!

இந்த விருது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய திரையிசை உலகை சர்வதேச அரங்கில் தொடர்ந்து தலைநிமிரச் செய்து வரும் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான 'கோல்டன் பிளேட் விருது' வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மெல்லன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் அச்சீவ்மென்ட்' அமைப்பின் 56-வது சர்வதேச சாதனையாளர்கள் மாநாட்டில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' திரைப்படங்களின் இயக்குநர் பீட்டர் ஜாக்ச ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த விருதை நேரில் வழங்கிக் கௌரவித்தார்.

கோல்டன் பிளேட் விருது' என்பது கலை, அறிவியல், பொதுச் சேவை மற்றும் விளையாட்டுத் துறைகளில் உலகளாவிய ரீதியில் மிக நீண்ட தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு உத்வேகமாகத் திகழும் ஆளுமைகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாகும்.

இந்த விருதைப் பெறுவதன் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹருகி முரகாமி, நடிகை ஜூலி ஆண்ட்ரூஸ், பிரபல இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பர், நடிகர் சாமுவேல் எல்.ஜாக்சன் போன்ற சர்வதேச மாமேதைகளின் பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்துள்ளார்.

விருதைப் பெற்றுக் கொண்ட பின் பேசிய ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், "இந்த உயரிய விருதைப் பெறுவதில் நான் மிகவும் பணிவன்புடன் பெருமை கொள்கிறேன். இந்திய நாடு, என் தாய் மண்ணின் மக்கள், என்னோடு பணியாற்றிய படைப்பாளிகள் மற்றும் இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்து வரும் உலகெங்கிலும் உள்ள எனது ரசிகர்களின் அன்பு இல்லாமல் இந்த பயணம் சாத்தியமாகி இருக்காது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இயக்குநர் பீட்டர் ஜாக்சனுடன் இணைந்து விருதை ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இந்த உலகளாவிய சாதனையை அடுத்து, பாலிவுட் மற்றும் கோலிவுட்டைச் சேர்ந்த முன்னணித் திரைப்பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

சமூக வலைத்தளங்களில் #ARRahman மற்றும் #GoldenPlateAward ஆகிய ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.இரண்டு ஆஸ்கர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், பாஃப்டா மற்றும் கோல்டன் குளோப் விருதுகளைத் தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானின் மகுடத்தில் தற்போது 'கோல்டன் பிளேட்' விருதும் இணைந்துள்ளது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.