வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது 'ஒன்ஸ் மோர்' படத்தில் காதல் நாயகனாக மாறியதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தில் அர்ஜுன் தாஸின் புதிய சாக்லேட் பாய் கதாபாத்திரத்தை பார்த்த நெட்டிசன்கள், 'கைதி', 'மாஸ்டர்' போன்ற படங்களில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த அவரா இப்படி கணீர் குரலை வைத்துக் கொண்டு மிகவும் க்யூட்டாகவும் மென்மையாகவும் காதல் செய்கிறார் என்று வியந்து பாராட்டி வருகின்றனர்.
அதிதி ஷங்கருடன் அவர் இணைந்து நடித்துள்ள ரொமாண்டிக் காட்சிகள் மற்றும் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி மிகவும் புத்துணர்ச்சியாகவும் ரசிக்கும்படியாகவும் இருப்பதாகவும், ஆக்ஷன் ஜானரைத் தாண்டி ஒரு லவ்வர் பாயாகத் தங்களை முழுமையாகக் கவர்ந்து தனக்குள் இருக்கும் அசாத்தியமான பல்துறை நடிப்புத் திறமையை அவர் மீண்டும் நிரூபித்துவிட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத்து மற்றும் இயக்கத்தில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அன்று வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படம் வெளியானது.
கடந்த கால காதல் தோல்வியின் வலியால் இனி காதலே வேண்டாம் என்று ஒதுங்கி வாழும் ரகு (அர்ஜுன் தாஸ்) மற்றும் அவனது வாழ்க்கையில் நுழைந்து மீண்டும் அவனுக்குள் காதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த முயலும் கலகலப்பான அஞ்சலி (அதிதி ஷங்கர்) ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு அழகான காதல் மற்றும் எமோஷனல் பயணமாகும்.
ஹிஷாம் அப்துல் வஹாபின் இசை மற்றும் கச்சிதமான முதல் பாதி ஆகியவை படத்திற்கு பெரும் பலமாக இருந்தாலும், இரண்டாம் பாதியின் மெதுவான திரைக்கதை சற்று தொய்வை ஏற்படுத்தினாலும், ஒட்டுமொத்தமாக உறவுகளின் முதிர்ச்சியையும் காதலுக்கு 'ஒன்ஸ் மோர்' இரண்டாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதையும் அழகாகப் பேசும் ஒரு ஃபீல்-குட் ரொமாண்டிக் என்டர்டெய்னராக இப்படம் தியேட்டர்களில் வெற்றி நடை போடுகிறது.
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் 'ஒன்ஸ் மோர்' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸிலும் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
Sacnilk வலைத்தளத்தின் தகவல்படி, இப்படம் வெளியான முதல் 3 நாட்களிலேயே ரூ.1 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.