சினிமா செய்திகள்

‘அரிகொம்பன்’ படத்தின் புரொமோஷன் டூரை தொடங்கி வைத்தார் கலைப்புலி எஸ். தாணு!

இப்படத்தின் பாடல்களில் தேவா, ஜி.வி. பிரகாஷ் குமார், சின்மயி, வேல்முருகன் ஆகியோர் பங்களித்துள்ளனர்.

மேஜிக் பிக்சர்ஸ் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் புரொமோஷன் டூரை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அரிகொம்பன் யானை

யானையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, ‘அரிகொம்பன்’ யானையின் பிரம்மாண்ட மாதிரி உருவம் தமிழ்நாடு முழுவதும் பயணித்து பொதுமக்களைச் சந்திக்க உள்ளது.

இந்த யானையுடன் செல்ஃபி எடுத்து, மேஜிக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்து பதிவிடும் ரசிகர்களுக்கு, குலுக்கல் முறையில் மொபைல் போன், தொலைக்காட்சி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கதைகளம் மற்றும் நட்சத்திரங்கள்

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், 1980-களில் வனப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும், யானையைச் சுற்றி நிகழும் சம்பவங்களையும் ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்கிறது.

இப்படத்தில் மிதுன் மகேஸ்வரனுக்கு ஜோடியாக தேவிகா கிருஷ்ணன் நடித்துள்ளார். வில்லனாக அஜய் நடிக்க, அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், சுப்பிரமணிய சிவா, ஆதிரா, மூ. ராமசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

கேரள ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ். அனிஷ் லால் வனப்பகுதியில் யானை தொடர்பான காட்சிகளையும் படமாக்கியுள்ளார். சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களில் தேவா, ஜி.வி. பிரகாஷ் குமார், சின்மயி, வேல்முருகன் ஆகியோர் பங்களித்துள்ளனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தொடங்கி வைத்துள்ள இந்த வித்தியாசமான புரொமோஷன் பயணம், தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT