கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனிடையே, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் குழந்தை பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக மருத்துவர் விஜிலா கூறுகையில், பெண் குழந்தையின் உடலில் அதிக ரத்தப்போக்கு இருந்தது. குழந்தையின் பிறப்பு உறுப்பில் தசை கிழிந்து இருந்தது. குழந்தை அதிர்ச்சியில் இருந்து மீளாததால் சிகிச்சை அளித்த போதிலும் பலன் அளிக்கவில்லை என தெரிவித்து இருந்தார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், நடிகை அறந்தாங்கி நிஷா இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில்,
பெண்கள் வாழ தகுதியற்ற நாடு தமிழ்நாடு என்று முடிவு செய்து விடுங்கள், போதும் இந்த பெண் பிறப்பு பெண்ணாகப் பிறந்ததை தவிர எங்கள் உறுப்பு எந்த பாவமும் செய்யவில்லை, அந்தக் குழந்தைக்கு இரங்கல் தெரிவிக்க என்னிடம் வார்த்தையும் இல்லை இதற்கு நீதி கேட்க எனக்கு உரிமையும் இல்லை, போதும் இனி இந்த நாட்டில் பெண் பிள்ளைகளே பிறக்காமல் இருக்க இறைவன் சபிக்கட்டும்... என்று கூறியுள்ளார்.
நிஷாவின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவாகவும், தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.