விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் கிராமத்துப் பெண் சத்விகா வீரவள்ளி. குடும்பத்தினரின் எதிர்ப்பால் படிப்பைத் தொடர முடியாமல் திருமண வாழ்க்கைக்குள் நுழைகிறாள். கார் மெக்கானிக்காகவும், ஓட்டுநராகவும் வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் துல்கர் சல்மான் அவரது கணவனாகிறார்.
திருமணத்துக்குப் பிறகு கனவைத் தெரிந்துகொள்ளும் துல்கர்சல்மான், அவரது லட்சியத்தைத் தனது கனவாகவே ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றப் போராடுகிறார்.
இதற்காக இருவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? இறுதியில் சத்விகாவின் விண்வெளிக் கனவு நனவானதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
துல்கர் சல்மான், தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காகத் தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கணவனாக உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார். அறிமுக நடிகை சத்விகா வீராவள்ளி, கல்பனாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கனவுகளுடன் துடிக்கும் இளம் பெண்ணாகவும், வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளைச் சந்திக்கும் பெண்ணாகவும் தனது நடிப்பில் முதிர்ச்சியைக் காட்டியிருக்கிறார்.
இருவருக்கும் இடையிலான அன்பும், புரிதலும் நிறைந்த காட்சிகள் படத்தின் முக்கிய பலம்.
சுருதிஹாசன், ருஹானி சர்மா, சுவாசிகா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
குறிப்பாக, இரண்டாம் பாதியில் சுருதி ஹாசனின் வருகை கதைக்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்க்கிறது.
கல்பனாவின் கனவை மையமாக வைத்து, கணவன் மனைவிக்கு இடையிலான அன்பு, புரிதல், ஒருவருடைய லட்சியத்துக்கு மற்றொருவர் துணையாக நிற்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பவன் சாதினேனி. வழக்கமான கமர்ஷியல் அம்சங்களைத் தவிர்த்து, அழகான உணர்வுபூர்வமான கதையாகப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
முதல் பாதியில் சத்விகா பின்னணி, திருமணம், கிருஷ்ணா அவளுக்கு அளிக்கும் ஆதரவு என நிதானமாக நகரும் திரைக்கதை, இடைவேளையில் வரும் திருப்பத்துக்குப் பிறகு வேகம் எடுக்கிறது.
குறிப்பாக, இறுதிக்கட்டக் காட்சிகள் உணர்வுகளைக் கிளறி, மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். கிராமப்புற அழகையும், விண்வெளி தொடர்பான காட்சிகளையும் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் பின்னணி இசையும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கின்றன.
ஒருவரின் கனவை மற்றொருவர் புரிந்துகொண்டு துணை நிற்பதே உண்மையான காதல் என்பதை உணர்த்தும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய திரைப்படம்.