சினிமா செய்திகள்

விஷாலின் ‘மகுடம்’ படத்தில் பவர்புல் கதாபாத்திரம்: நடிகை அஞ்சலி பெருமிதம்!

"இந்த தருணத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாரை நாங்கள் பெரிதும் மிஸ் செய்கிறோம்"

நடிகர் விஷால் முதல்முறையாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ‘மகுடம்’. இந்தத் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அஞ்சலி தனது கதாபாத்திரம் குறித்து நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்:

"விஷால் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகுடம்’ திரைப்படத்தில் ஒரு வலிமையான, அழகான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். விஷால் எனக்கு கடந்த 15 ஆண்டுகாலப் பழக்கமானவர், அவருடன் எனக்கு ஒரு சிறப்பான நட்புப் பிணைப்பு உள்ளது.

மிகச்சிறந்த படமாக உருவாகி வரும் இத்திரைப்படம், 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் '99-வது' மைல்கல் திரைப்படமாகும்.

இந்த தருணத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாரை நாங்கள் பெரிதும் மிஸ் செய்கிறோம், இருப்பினும் அவரது ஆசிகள் எப்போதும் எங்களுடன் இருக்கும் என்று நம்புகிறோம்." என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டீசரில் விஷால் கார்ப்பரேட் ஊழியர், கேங்ஸ்டர், முதிய வயது கொலையாளி என முற்றிலும் மாறுபட்ட மூன்று விதமான கெட்டப்புகளில் மிரட்டியுள்ளார். ஆரம்பத்தில் இத்திரைப்படத்தை ரவி அரசு இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, கதையை அவரே எழுதியுள்ளார்.

பின்னர் ஏற்பட்ட சில மாற்றங்களால் விஷால் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அஞ்சலியுடன் இணைந்து துஷாரா விஜயன், யோகி பாபு, ஜான் விஜய், ஜெயபிரகாஷ், அஜய் மற்றும் வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இப்படம் அடுத்த மாதம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.