சீதக்காதி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களுக்கு பின்னர் இயக்குநர் பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி இணைந்த ‘பத்தா’ படத்தை இயக்குநர் சங்கர் பாராட்டியுள்ளார்.
படத்தில் நடித்த சிறுவனுக்கு தேசிய விருது வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்.,
“‘பத்தா’ ஒரு நல்ல கதை, மனிதநேயம், சிறந்த நகைச்சுவை மற்றும் படம் முழுவதும் கைதட்டல் பெறத் தகுதியான தருணங்களைக் கொண்ட ஒரு அழகான திரைப்படம்.
மிகச் சிறந்த நடிகர்தேர்வு மற்றும் நடிப்பு; அதோடு, ஒவ்வொரு முகத்தின் ‘க்ளோஸ்-அப்’ காட்சிகளும் மிக அருமையாக உள்ளன.
மிகச்சிறந்த மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பு விஜய் சேதுபதியால் வழங்கப்பட்டுள்ளது. சிறுவன் சாய் பிரித்விராஜ் தேசிய விருதுப் பெற தகுதியானவன்.
லிஜோமோல் ஜோஸ் மிகவும் இயல்பாகவும், நேர்த்தியாகவும் நடித்துள்ளார். சாய் அபயங்கரின் பின்னணி இசை புதுமையாகவும் வழக்கத்திற்கு மாறானதாகவும் உள்ளது; இது சில காட்சிகளை வேறொரு உயரத்திற்கு கொண்டு செல்கிறது.
அப்பாவித்தனமும் உணர்ச்சிகளும் நிறைந்த பல நெகிழ்ச்சியான தருணங்கள் படத்தில் உள்ளன. இத்தகைய தரமான மற்றும் மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்ததற்காக தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
இயக்குநர் பாலாஜி தரணீதரனிடமிருந்து மற்றொரு மறக்க முடியாத திரைப்படம். இது பாலாஜியின் ‘வாழ்க்கை அழகானது’.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியுடன் இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஸ்டார் ஸ்டுடியோ 18, சினி 1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இன்று திரையரங்குகளில் படம் வெளியாகி ஓடிவருகிறது.