இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த விருதுப் பட்டியலில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினர் பல முக்கியப் பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இதில், கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற அமரன் திரைப்படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கிய 'அமரன்' திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை ராஜ்குமார் பெரியசாமி தட்டிச் சென்றுள்ளார்.
'அமரன்' திரைப்படத்திற்கு ஆக்ரோஷமும் காதலும் கலந்த உலகத்தரம் வாய்ந்த பின்னணி இசையை வழங்கியதற்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
'அமரன்' திரைப்படத்தின் நேர்த்தியான படத்தொகுப்பிற்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் ஆர்.கலைவாணன்.