சினிமா செய்திகள்

ஆந்திராவில் கால்பதித்தது அல்லு அர்ஜுனின் 'AAA சினிமாஸ்': விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் திறப்பு!

சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தனிநபர் காட்சிகளுக்காக '82 Lounge' எனும் பிரத்யேக வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது.

இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன், ஐதராபாத்தைத் தொடர்ந்து தனது 'AAA Cinemas' (Asian Allu Arjun Cinemas) திரையரங்கத்தை ஆந்திரப் பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளார். விசாகப்பட்டினம் சாலக்ராமபுரத்தில் உள்ள புதிய 'இனார்பிட் மாலில்' அமைந்துள்ள இந்த அதிநவீன மல்டிபிளக்ஸ் வளாகத்தை நேற்று திறந்து வைத்தார்.

திநவீன திரைகள்

மொத்தம் 8 திரைகள் மற்றும் 1,556 இருக்கை வசதிகளைக் கொண்டுள்ள இந்த வளாகத்தில், இந்தியாவின் முதல் 'LED Projection Q-Luxon' திரை நிறுவப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திலேயே மிகப்பெரிய அளவிலான (70 அடி × 30 அடி) பிரம்மாண்ட LED சினிமா திரை இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

விஐபி பார்வையாளர்களுக்காகப் பிரத்யேகமாக 'ஐகான் ஸ்டார் லவுஞ்ச்' மற்றும் ரீக்லைனர் இருக்கைகளுக்கான தனி நுழைவாயில் வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தனிநபர் காட்சிகளுக்காக '82 Lounge' எனும் பிரத்யேக வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது.

பிசினஸ் கூட்டாண்மை

ஐதராபாத் அமீர்பேட்டையில் அமைந்த முதல் 'AAA சினிமாஸ்' திரையரங்கின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு திரையுலகின் பிரபல விநியோக நிறுவனமான 'ஏசியன் சினிமாஸ்' உடன் இணைந்த கூட்டு முயற்சியாக அல்லு அர்ஜுன் இத்திட்டத்தை ஆந்திராவில் விரிவுபடுத்தியுள்ளார்.

நெகிழ்ச்சியுடன் பேசிய அல்லு அர்ஜுன்

திரையரங்கைத் திறந்து வைத்துப் பேசிய அல்லு அர்ஜுன், "எனது முதல் திரைப்படமான 'கங்கோத்ரி' காலத்திலிருந்தே விசாகப்பட்டினத்துடன் எனக்கு ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு உண்டு. இந்த அழகான நகரத்தில் AAA சினிமாஸைக் கொண்டு வருவது எனது நீண்ட நாள் கனவு. ரசிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சினிமா அனுபவத்தை வழங்குவதற்காகவே இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.