சினிமா செய்திகள்

பீகார்: பாஜகவின் இளம் பெண் எம்எல்ஏ தமிழில் பாடிய அஜித் பாடல் இணையத்தில் வைரல்

தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் மைதிலி போட்டியிட்டார். 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் மைதிலி வெற்றி பெற்றார்.

பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 202 தொகுதிகளை கைப்பற்றி ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

பாஜக 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்துள்ளார்.

கடந்த மாதம் பாஜகவில் இணைந்த அடுத்த நாளே இவருக்கு வேட்பாளர் சீட் வழங்கப்பட்ட நிலையில் அரசியலில் பிரவேசித்த ஒரே மாதத்தில் எம்எல்ஏவாகவும் ஆகி கவனம் பெற்று வருகிறார். 84,915 வாக்குகள் பெற்ற இவர் எதிர்த்து போட்டியிட்ட மகாபந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வினோத் மிஸ்ராவை 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில், எம்எல்ஏ மைதிலி தாகூர், தமிழில் பாடிய "கண்ணான கண்ணே' பாடல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.