பிரான்சில் நடைபெற்று வரும் சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்க சென்றுள்ள நடிகர் அஜித் குமார், தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் அங்கு எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
பிரான்சின் புகழ்பெற்ற 'சர்க்யூட் டெஸ் 24 ஹவர்ஸ் டு மான்ஸ்' ஓடுதளத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச பந்தயத்தில் அஜித் குமாரின் 'அஜித் குமார் ரேசிங்' அணி பங்கேற்றது. லெ மான்ஸ் பந்தய வரலாற்றிலேயே முதன்முறையாகப் பங்கேற்ற இந்திய அணி அஜித்துடையது தான். 62 கார்கள் போட்டியிட்ட இந்த மிகக் கடுமையான பந்தயத்தில், அஜித்தின் அணி முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது. இதில் கார் எண் 16 தனது பிரிவில் 9-வது இடத்தையும், கார் எண் 36 ஒட்டுமொத்த வரிசையில் 13-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த பெருமைமிகு தருணத்தை முன்னிட்டு அஜித்தின் மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அஜித், ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோர் உள்ளனர். ரேசிங் உடையில் அஜித் இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு, "A little bit of France, a whole lot of love" என ஷாலினி தலைப்பிட்டுள்ளார்.
அஜித்தின் தாயார் மோகினி மணி (89) வயது மூப்பு காரணமாகச் சமீபத்தில் காலமானார். அந்தப் பேரிழப்பிற்குப் பிறகு, அஜித் தனது குடும்பத்தினருடன் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.