தமிழ் சினிமாவில் குஷ்புவுக்குக் கோவில் கட்டியது, நயன்தாராவுக்கு 60 அடி உயர கட்-அவுட் வைத்தது போன்ற ரசிகர்களின் அதிரடிச் செயல்களைத் தொடர்ந்து, தற்போது நடிகர் அஜித்குமாருக்கு முழு உருவச் சிலை வைத்து, பால் அபிஷேகம் செய்யப்பட்டுள்ள வினோதச் சம்பவம் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
சென்னை மாங்காடு அருகே உள்ள கோவூரில், ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்ற கழகம்’ என்ற அமைப்பின் சார்பில் இந்தச் சிலை அமைக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடத்தப்பட்டுள்ளது.
அனைத்து நண்பர்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பாபு தலைமையில் இந்த முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. நடிகர் அஜித்தின் அச்சு அசலான உயரத்திலேயே இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிலைக்குப் பிரம்மாண்டமான முறையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, சிலைக்கு மாலையணிவித்து மகா ஆரத்தி எடுக்கப்பட்டது.
இந்த சிலாபிஷேக வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகின்றன.
சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பாபு, தங்களது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்துப் பல அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். 'இந்தச் சிலையைச் செய்வதற்கு எங்களுக்கு 3 மாதங்கள் ஆனது.
2031-ஆம் ஆண்டு எங்களின் முதல்வர், உங்களின் முதல்வர், சமத்துவ முதல்வர் அஜித் தான்! அடுத்தகட்டமாக எங்கள் கட்சியை முறைப்படி பதிவு செய்யவிருக்கிறோம். அதற்கு எங்களின் ஒரே தலைவரான அஜித் வர வேண்டும். எங்கள் கட்சிக்குத் தலைவர், பொதுச்செயலாளர் எல்லாமே அஜித்தான், நாங்கள் வெறும் உறுப்பினர்கள் மட்டுமே.
மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்துப் பேசிய அவர், "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், விஜய்யும் அஜித்தும் நண்பர்களாக இருப்பதில் தவறில்லை.
ஆனால் அரசியல் களத்தில் விஜய்யை எதிர்த்து நிற்கும் ஒரே தலைவர் அஜித்தான். அஜித் குமார் களமிறங்கும்போது அவருக்கு முன்னால் எதுவும் நிற்காது," என்று சவால் விடுத்துள்ளார்.
சமீபத்தில் லண்டனில் விஜய்யும் அஜித்தும் சந்தித்துக் கட்டிப்பிடித்துக் கொண்ட புகைப்படம் வைரலானதைக் குறிப்பிட்ட பாபு, "அஜித்தின் ஓட்டுகளைப் பெறுவதற்காகத்தான் விஜய்யின் தரப்பினர் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
வரவிருக்கும் இடைத்தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் லண்டன் சென்று அஜித்தை விஜய் சந்தித்துள்ளார்," என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இறுதியாக, கோவூரில் அடுத்தகட்டமாக 3,000 சதுர அடி பரப்பளவில் நடிகர் அஜித்துக்காகப் பிரத்யேகமாகக் கோவில் கட்டத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
நடிகர் அஜித் தொடர்ந்து தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகியே இருக்கும் நிலையில், ரசிகர்களின் இந்த அரசியல் அதிரடி கோலிவுட்டிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.