ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அர்ஜுன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்காலிகமாக 'AGS 28' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஏஜிஎஸ் நிறுவனம் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. அதில், "ஏஜிஎஸ் 28 படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. முதல் கிளாப்பில் இருந்து இறுதி 'ஷாட் ஓகே' வரை, உற்சாகம், கடின உழைப்பு, சிறந்த சினிமா அனுபவம் நிறைந்த பயணமாக இருந்தது. இந்த படத்திற்காக முழு மனதுடன் உழைத்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் கொக்கன், பவன், வினோத் சாகர், பாலா ஹாசன் ஆர் மற்றும் திலீபன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில், ரவி பஸ்ரூர் இசையமைக்க, அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பும், சண்டை இயக்குநராக ஃபீனிக்ஸ் பிரபு ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பத்தி எஸ். அகோரம், கல்பத்தி எஸ். கணேஷ், கல்பத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். அர்ச்சனா கல்பத்தி இந்தப் படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக உள்ளார்.