தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து சாதித்த நடிகைகள் 
சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து சாதித்த நடிகைகள்!

கதாநாயகியாக மட்டும் நடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தாண்டி, தன்னுடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்தார்.

சினிமா உலகில் ஒரு நடிகை சில ஆண்டுகள் திரையுலகை விட்டு விலகினால், மீண்டும் அவருக்கு அதே வரவேற்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுவது வழக்கம். குறிப்பாக கதாநாயகிகளுக்கு வயது, இடைவெளி, இளம் நடிகைகள் வருகை என பல சவால்கள் காத்திருக்கும். ஆனால், தமிழ் சினிமாவில் சில நடிகைகள் எல்லா தடைகளையும் தாண்டி, ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் தங்களது இடத்தை கம்பீரமாக பிடித்துள்ளனர். ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்ற கணக்குகளை எல்லாம் பொய்யாக்கி, தங்களது திறமைக்கும் திரை ஆளுமைக்கும் இன்னும் வயதாகவில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

ஜோதிகா

இந்த பட்டியலில் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை ஜோதிகா. சூர்யாவுடன் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா, சுமார் 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார். மீண்டும் கேமரா முன் நிற்கும்போது தனக்கே பதட்டம் இருந்ததாக ஜோதிகா கூறியிருந்தார். ஆனால், அந்தப் படம் வெளியானதும் ரசிகர்கள் அவரை பழைய அதே அன்புடன் வரவேற்றனர்.

முக்கியமாக, ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவான படத்தில் ஜோதிகா மீண்டும் கதாநாயகியாக நடித்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ‘மகளிர் மட்டும்’, ‘காற்றின் மொழி’, ‘ராட்சசி’, ‘பொன்மகள் வந்தாள்’ என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, தனது இரண்டாவது இன்னிங்சை பிரமாதமாக மாற்றினார்.

சிம்ரன்

90களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் சிம்ரன். நடிப்பு, நடனம், திரை ஆளுமை என தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய சிம்ரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பேட்ட’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த சிம்ரனின் கம்பேக் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக்கியது. கதாநாயகியாக மட்டும் நடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தாண்டி, தன்னுடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்தார். அதன் பிறகு ‘மகான்’, ‘அந்தகன்’ டூரிஸ்ட் பேமிலி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் மீண்டும் கொண்டாடப்பட்டது.

லைலா

2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லைலா. திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை காரணமாக சினிமாவில் இருந்து விலகியிருந்த லைலா, சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சர்தார்’ படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பியிருந்தாலும், லைலாவின் முகத்தை ரசிகர்கள் மறக்கவில்லை. அவர் கன்னக்குழியுடன் திரையில் தோன்றிய தருணமே ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. ஹீரோயினாக நடித்த காலத்தை தாண்டி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்டு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த காஜல் அகர்வால், திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு காரணமாக சினிமாவில் இடைவெளி எடுத்தார். பின்னர் மீண்டும் திரும்பிய காஜல், தனது கேரியரை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு நடிகைகளின் சினிமா வாய்ப்பு குறைந்து விடும் என்ற பழைய பார்வையை மாற்றியவர்களில் காஜலும் ஒருவர். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் புதிய அணுகுமுறையை கடைப்பிடித்து, தனது இடத்தை மீண்டும் தக்க வைத்துள்ளார்.

ரோஜா

இதேபோல் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரோஜா குடும்ப வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்திற்காக சினிமா நடிப்பிற்கு பல ஆண்டுகள் ஓய்வு கொடுத்திருந்தார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரோஜா நடிக்க தொடங்கியுள்ளார். லெனின் பாண்டியன், அன்பே டயானா போன்ற படங்களில் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.