'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தேஜு அஸ்வினி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'மூன்றாம் கண்' திரைப்படம் ஜூன் 12-ஆம் தேதி திரைக்கு வரத் தயாராக உள்ளது. இப்படத்தின் புரோமசன் நிகழ்ச்சிக்காக அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது சினிமா பயணத்தில் தவறவிட்ட மிகப்பெரிய இரண்டு பட வாய்ப்புகள் குறித்து தேஜு அஸ்வினி வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'லவ்வர்' திரைப்படத்தில், ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருந்த முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் தேஜு அஸ்வினியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதேபோல், பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்த 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்த கதாபாத்திரத்திற்கான வாய்ப்பும் இவருக்கு முதலில் வந்துள்ளது. ஆனால், பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களாலும், கால்ஷீட் குளறுபடிகளாலும் இந்த இரண்டு முக்கிய படங்களிலும் அவரால் ஒப்பந்தமாகி நடிக்க முடியாமல் போயுள்ளது.
இதுகுறித்து அவர் பேசுகையில்: "டிமான்டி காலனி 2 மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு படங்களின் கதாநாயகி வாய்ப்புகளும் என்னைத்தேடி வந்தன. ஆனால், சில காரணங்களால் என்னால் அவற்றில் நடிக்க முடியாமல் போனது. எனது சினிமா வாழ்க்கையில் நான் தவறவிட்ட மிக முக்கியமான, நான் இப்போதும் நினைத்து வருந்தக்கூடிய இரண்டு பெரிய வாய்ப்புகள் இவைதான்." என்று ஓப்பந்தமாக முடியாமல் போன ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது வித்தார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப் மற்றும் திரிகுண் ஆகியோருடன் இணைந்து தேஜு அஸ்வினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மூன்றாம் கண்' திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஒரு தொழிற்சாலையில் நடக்கும் கொலையைச் சுற்றியே இந்த சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படத்தின் கதை நகர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.