தமிழில் நடிகர் அர்ஜூனுடன் இணைந்து ஜென்டில்மேன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்த நடிகை மதுபாலா, திரிஷாவுடன் தனக்கு நெருங்கிய நட்பு இருப்பதாகவும், நடிகை நயன்தாரா தனது திறமையால் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான அழகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக மதுபாலா அறிமுகமானார்.
சென்னையில் பிறந்த இவர், சுமார் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம், இவருக்கு தமிழ்நாடு சிறப்பு விருதை பெற்று தந்தது.
இதையடுத்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
இந்த நிலையில் மாலைமலர் செய்தி நிறுவனத்திற்கு நடிகை மதுபாலா பிரத்யேகமாக அளித்த நேர்காணலில், தனது சினிமா அனுபவங்களை குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் எனது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பாசிட்டிவாகவே (நேர்மறையாக) இருக்க விரும்புவேன்.
நான் நடித்த திரைப்படம் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் அல்லது அந்த படம் மீதான விமர்சனங்கள் எழுந்தாலும், அதை பற்றி கவலைப்படாமல் அடுத்த திரைப்படத்தின் மீது எனது கவனத்தை செலுத்துவேன்.
நான் தமிழ் நடிகையாக இருந்தாலும் கூட, தமிழ் பட இயக்குநர்கள் என்னை அவ்வளாக தங்கள் படங்களில் பயன்படுத்தவில்லை.
எனக்கு ரோஜா, அழகன் மற்றும் ஜென்டில்மேன் போன்ற படங்கள், ரசிகர்களை பெற்று தந்தது.
எனக்கு நடிகை திரிஷாவுடன் நல்ல நட்பு இருக்கிறது; நடிகை குஷ்பு மூலம் எனக்கு அவருடன் நட்பு ஏற்பட்டது.
நடிகை நயன்தாரா தனது திறமையால் இந்த இடத்தை அடைந்துள்ளார்” என அவர் கூறினார்.