சினிமா செய்திகள்

வாழ்க்கையில் தோல்வியே கிடையாது, ‘ஒன்ஸ்மோர்’ என்று மீண்டும் முயற்சி செய்யுங்கள் - அகரம் விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சிப் பேச்சு!

தோல்விகள் அல்லது தடைகள் வரும்போது வாழ்க்கையிடம் நீங்கள் சொல்ல வேண்டிய ஒரே விஷயம் 'ஒன்ஸ்மோர்' - நடிகர் சூர்யா.

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

அகரம் 47-வது ஆண்டு விழா

இந்த விழாவில் பிளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்வி நிதியுதவியும், மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு நிதியுதவி மற்றும் விருதும் வழங்கப்பட்டன.

மேலும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் 3 முக்கிய அமைப்புகளுக்கும் நிதியுதவி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்வது குறித்து சினிமா உதாரணத்துடன் ஊக்கமளித்துப் பேசினார்.

சினிமாவில் கற்ற பாடம்

விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:
"நான் சினிமா உலகிற்கு வந்து கிட்டத்தட்ட 28, 29 வருடங்கள் ஆகப்போகிறது என்று சொல்கிறார்கள்.

இந்த சினிமா வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். சினிமாவில் 'ரீடேக்ஸ்' (Re-takes) என்பது சாதாரண ஒரு விஷயம். எந்தவொரு காட்சியும் ஒரே ஷாட்டில் முடிந்துவிடுவது இல்லை.

சில நேரங்களில் ஐந்து அல்லது ஆறு டேக்குகள் ஆகும். காட்சி மிகச் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக 18 முதல் 30 தடவை கூட ரீடேக்குகள் போவதுண்டு என்று கூறினார்.

வாழ்க்கை ஒரு இயக்குநர்

"ஒவ்வொரு முறையும் நாம் செய்யும் காட்சி சரியாக வராதபோது, இயக்குநர் ஒருபோதும் நம்மைப் பார்த்து ‘நீ தோற்றுவிட்டாய் ’ என்று சொல்ல மாட்டார். மாறாக, ‘ஒன்ஸ்மோர்’ என்றுதான் கூறுவார். அந்த இயக்குநரைத்தான் நான் நம் வாழ்க்கையாகப் பார்க்கிறேன்.

வாழ்க்கை ஒருபோதும் உங்களை 'பெயில்' என்று சொல்வதில்லை. நாமாகத்தான் அப்படி நினைத்துக்கொள்கிறோம். ஆனால், வாழ்க்கை அப்படிப்பட்டது அல்ல என்று பேசி குழந்தைகளை ஊக்கப்படுத்தினார்.

மாணவர்களுக்கான சூர்யாவின் அறிவுரை

நீங்கள் பெற்ற மதிப்பெண்ணாக இருக்கலாம், கல்லூரியில் சேரும் சீட்டாக இருக்கலாம் அல்லது நீங்கள் சேரும் முதல் வேலையாக இருக்கலாம்; எதுவுமே உங்களுக்குத் திருப்தியாக இல்லாவிட்டால் அதுவே கடைசி முடிவு கிடையாது.

தோல்விகள் அல்லது தடைகள் வரும்போது வாழ்க்கையிடம் நீங்கள் சொல்ல வேண்டிய ஒரே விஷயம் 'ஒன்ஸ்மோர்'.

"என்னால் இன்னொரு முறை இதைச் செய்ய முடியும், என்னைத் திருத்திக்கொண்டு இன்னும் மேம்படுத்த முடியும்" என்கிற நம்பிக்கையை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.

எதுவுமே வாழ்க்கையின் இறுதி முடிவு கிடையாது என்பதை மாணவர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று நடிகர் சூர்யா மிகவும் நெகிழ்ச்சியோடு தனது உரையை நிறைவு செய்தார்.

SCROLL FOR NEXT