தம்பி ஜேசன் சஞ்சய் தன் தந்தை விஜயைப் போலவே அமைதியாக, வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ‘சிக்மா’ படத்தின் கதையை ஜேசன் சஞ்சய் இரண்டரை மணி நேரம் எந்தவித கவனச்சிதறலும் இன்றி கதையை முழுமையாக என்னிடம் விவரித்தார். அவர் கதை சொன்ன விதம், விஜய் அண்ணாவுடன் பேசியது போலவும், அவருடன் இருந்த மாதிரி உணர்வும் எனக்கு ஏற்பட்டது என நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள படம் ‘சிக்மா’. இப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில்வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘சிக்மா’ படம் வெளியாக ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், சென்னையில் படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சூரி, விக்ராந்த், ‘சிக்மா’ பட நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சூரி பேசியதாவது:-
தம்பி ஜேசன் சஞ்சய் தன் தந்தை விஜயைப் போலவே அமைதியாக, வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ‘சிக்மா’ படத்தின் கதையை ஜேசன் சஞ்சய் இரண்டரை மணி நேரம் எந்தவித கவனச்சிதறலும் இன்றி முழுமையாக என்னிடம் விவரித்தார். அவர் கதை சொன்ன விதம், விஜய் அண்ணாவுடன் பேசியது போலவும், அவருடன் இருந்த மாதிரி உணர்வும் எனக்கு ஏற்பட்டது.
ஜேசன் சஞ்சய் இயக்குநராக வெற்றி பெற வேண்டும்.
நான் தமிழ்குமரன் சாரிடம் கூறினேன், ‘அவர் மிகவும் அழகாக இருக்கிறார், கதாநாயகனாக நடிக்க வேண்டும்’ என்று. அவரிடம் கதாநாயகனாக நடிக்குமாறு தான் வற்புறுத்தி வருவதாகவும், ஆனால் அவர் இயக்குநராகப் பணியாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் தமிழ்குமரன் சார் என்னிடம் தெரிவித்தார். வாய்ப்பு கிடைத்தால் ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.