கேப்டன் விஜயகாந்த் அவர்களால் துவங்கப்பட்டு, தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தனது 10-ஆவது மைல்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது.
இந்தப் படத்தில் கேப்டனின் இளைய மகனான சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்த மணி சியோன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
இன்று காலை சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு முறைப்படி கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். இந்த நிலையில், இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது.
அதன்படி நடிகர் சண்முக பாண்டியன் மற்றும் இயக்குநர் மணி சியோன் இணையும் புதிய படத்திற்கு "கிங் அண்ட் குயின்ஸ்" என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த அறிவிப்பு வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் போர்டை அடித்து துவங்கி வைத்தார். டாக்டர்.ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, பிரகதி, காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும், இயக்குநர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர் அர்வி ஆகியோரும் இவ்விழாவை சிறப்பித்தனர். தயாரிப்பாளர் எல்கே சுதீஷ் எம்.பி தயாரிப்பில், கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது அடுத்தடுத்த பிரம்மாண்ட தயாரிப்புகளுடன் தமிழ் சினிமாவில் அதிரடி முத்திரை பதித்து வருகிறது.
ஏற்கனவே இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்து வரும் 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள "கிங் அண்ட் குயின்ஸ்" திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றே தொடங்கி அதிவேகமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு 'மாநகரம்', 'டானாக்காரன்' உள்ளிட்ட பல படங்களுக்கு பணியாற்றிய திறமைமிக்க பிரசன்ன குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.