சினிமா செய்திகள்

டாஸ்மாக் கடைகள் குறித்து முதல்வர் விஜய்க்கு நடிகர் பார்த்திபன் பலே யோசனை!

"இந்த யோசனையை நகைச்சுவை கலந்த முறையில் விளக்கியபோது முதல்வர் விஜய் சிரித்துக் கொண்டே கேட்டதாகவும் பார்த்திபன் கூறியுள்ளார்"

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யை சமீபத்தில் சந்தித்த நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபன் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக வித்தியாசமான யோசனையை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த முடிவு சமூக நலன் மற்றும் பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல்வரை சந்தித்தபோது தாம் கூறிய ஆலோசனை குறித்து பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில், “டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் வைத்திருப்பதற்குப் பதிலாக, சுடுகாடு, இடுகாடு அல்லது மின் மயானங்கள் போன்ற ஒதுக்குப்புற பகுதிகளுக்கு மாற்றலாம்” என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், சிகரெட் மற்றும் மதுபான பாட்டில்களில் மரண எச்சரிக்கை வாசகங்கள் இடப்படுவது போல, சுடுகாடு அருகே மதுக்கடை அமைந்தால் குடிப்பவர்களுக்கு உளவியல் ரீதியாக ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்றும், அதனால் மதுப் பழக்கத்தைக் குறைக்கும் எண்ணம் உருவாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடுவதால் கள்ளச்சாராயம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும் என்பதால், அரசின் வருவாயும் பாதிக்கப்படாமல், பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகளும் குறையும் வகையில் இத்தகைய மாற்று ஏற்பாடுகளை பரிசீலிக்கலாம் என பார்த்திபன் கருத்து தெரிவித்தார். இந்த யோசனையை நகைச்சுவை கலந்த முறையில் விளக்கியபோது முதல்வர் விஜய் சிரித்துக் கொண்டே கேட்டதாகவும் பார்த்திபன் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் அவரது இந்த கருத்து தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.