Parthiban  
சினிமா செய்திகள்

Parthiban | நான் நாயுடு பையன்... சாதி குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பார்த்திபன் விளக்கம்

ஐதராபாத்தில் நான் நாயுடு சாதியை சேர்ந்தவன் என்று பேசிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பார்த்திபன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

மாலை மலர்

பவன் கல்யாண் நடித்துள்ள உஸ்தாத் பகத் சிங் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பார்த்திபன், "நான் பார்த்திபன்... ராதாகிருஷ்ணன் பார்த்திபன்... ஒரு நாயுடு பையன். ஆமாம், ஒரு நாயுடு பையன்தான். ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு அவ்வளவாக வராது. தமிழ்தான் எனக்கு இயல்பாக வரும் மொழி.

இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்திப்போம். அப்போது நான் முழுமையாக தெலுங்கில் பேசுவேன் என்று இந்த மூர்த்தி உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மூர்த்திதான் எனது இயற்பெயர்" என்று கூறினார். ஐதராபாத்தில் பார்த்திபன் தனது சாதியை குறிப்பிட்டு பேசியது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. .

இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பார்த்திபன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சத்தியமாக சொல்கிறேன். எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.

அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி…. இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில் / இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன்.

இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள்.

உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்" என்று தெரிவித்தார்.