சினிமா செய்திகள்

நானே இதற்கு பொறுப்பு... வருத்தம் தெரிவித்த நடிகர் தனுஷ்

நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகளவில் ரசிகர்கள் திரண்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

தனுஷ் நடித்த 'ஓம்' படத்தின் நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தி குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். இது யாருடைய தவறு என்பதை ஆராயாமல், தானே பொறுப்பேற்று இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வேன் என உறுதியளித்தார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் 'ஓம்'. இதில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 20-ந்தேதி திரைக்கு வர உள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘ஓம்’ படத்தில் நடித்த நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் தனுஷ், புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும். அந்த அதிர்வு நல்லதுக்காக மட்டுமே பயன்பட வேண்டும் என்று பேசினார்.

ரசிகர்கள் அதிருப்தி

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகளவில் ரசிகர்கள் திரண்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அரங்கின் வெளியே இருந்த இரும்பு கதவுகள் மூடப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினர்.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் ரசிகர்கள் பங்கேற்காமல் அதிருப்தியுடன் சென்றது குறித்து அறிந்த நடிகர் தனுஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் தனுஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT