தமிழில் அன்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் பாலா. அடுத்து காதல் கிசு கிசு, கலிங்கா, மஞ்சள் வெயில், அஜித்தின் வீரம், கார்த்தியின் தம்பி, ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்போது கேரளாவில் கோட்டயத்தில் வசிக்கிறார். கடந்த 2024-ஆம் ஆண்டு கோகிலா என்பவரை திருமணம் செய்தார். பல ஆண்டுகளாக நடிகர் பாலாவின் குடும்ப பிரச்சினைகள், பரஸ்பர குற்றச்சாட்டுகள் மற்றும் பகிரங்க விவாதங்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒரு பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ள பாலா தான் சித்திரவதை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர், ‘கடந்த 10 ஆண்டுகளாக என்னை சித்திரவதை செய்து வருகிறார்கள். சட்டத்தின் பெயரால் ஒரு மனிதனை துன்புறுத்தி கொண்டிருக்கிறார்கள். என்னால் பெயர் சொல்ல முடியாது. அவர்களால் எதை வேண்டுமானாலும் சொல்ல முடியும்.
இனி என்னை யாராவது துன்புறுத்தினால், நான் ஒரு பெரிய செய்தியாளர் சந்திப்பை நடத்துவேன். எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசுவேன். இது நடக்கும், எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உண்மைகளைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் சொல்கிறேன், மன்னிக்கவும். கடைசியாக ஒன்று, எங்களை விஷம் வைத்து கொன்றுவிடுங்கள்,’ என்று அதில் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், அந்த வீடியோ குறித்து பாலா கூறுகையில் ‘நான் நல்லா இருக்கிறேன். நானும் என் மனைவியும் சந்தோஷமாக இருக்கிறோம். சட்டப்படி எங்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாளை அவருக்கு பிறந்தநாள் வைக்கத்தில் அதை கொண்டாட ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால், பழைய விஷயங்களை மனதில் வைத்து திருப்பி, திருப்பி சிலர் அடிக்கிறார்கள். சட்ட விஷயத்தில் பிரச்னை செய்கிறார்கள்.
நான் தீவிரவாதி அல்ல. என் தாத்தா பிரபல தயாரிப்பாளர் ஏ.கே.வேலன், என் அப்பா பிரபல இயக்குநர் ஜெயகுமார், அண்ணன் பெரிய இயக்குநர், பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு விஷயத்தை கேட்கிறேன். 8 ஆண்டுகளுக்குபின் எனக்கு பிரஷர், கேஸ் ஏன்?
நாளைக்கு எனக்கு லாட்டரி அடித்தால், நான் கார் வாங்கினால், என் மனைவிக்கு குழந்தை பிறந்தால் கூட வழக்குபோடுவார்களா? என் மனைவிக்கு ஒரு செயின் வாங்கிக்கொடுத்ததால் இந்த பிரச்னை. ஆனாலும் சொல்கிறேன், நான் கோழை அல்ல, சட்டப்படி அனைத்தையும் சந்திப்பேன். இப்போது நல்லா இருக்கிறேன்,’ என்றார்.