சினிமா செய்திகள்

Arjun | பட விழாவின் மேடையிலேயே முதலமைச்சர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் அர்ஜூன்

நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன்.

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "பிளாஸ்ட்". அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிளாஸ்ட் திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், 'பிளாஸ்ட்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் அர்ஜுன் பேசும் போது, ''வரலாறு காணாத ஒரு வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த என் நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

'பிளாஸ்ட்' திரைப்படம் உண்மையில் ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன்.

அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடம் இருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடம் இருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல் ஏ.ஜி.எஸ். நிறுவனம் ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை.

இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது," என்றார்.