கதை
டீ எஸ்டேட்கள் சூழ்ந்த மலைப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் இசக்கி கார்வண்ணன். அந்த பகுதியில் எந்த குற்றங்களும் நடைபெறாமல் இருப்பது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், அந்த ஊருக்கு ஆசிரியராக வரும் பிரவீன் பழனிசாமி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்க தொடங்கும் இசக்கி கார்வண்ணன், பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு கொடூரமாக கொலை செய்து வருவதை கண்டுபிடிக்கிறார்.
அவர்கள் யார்? எதற்காக இப்படி செய்கிறார்கள்? ஆசிரியர் கொலைக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அமைதியான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் கதையின் நாயகனாக இருந்தாலும், அவருக்கான காட்சிகளும் நடிப்பை வெளிப்படுத்தும் தருணங்களும் குறைவாக இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
அபி நட்சத்திரா படத்தில் தெரிந்த முகமாக கவனம் ஈர்க்கிறார். அவரது அறிமுக காட்சிகள் மற்றும் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட பில்டப் அனைத்தும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் கதையின் முக்கியமான திருப்பங்களில் அவரது கதாபாத்திரம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாமல் போவது படத்தின் பலவீனமாக மாறுகிறது.
கொலையாகும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் பழனிசாமி குறைந்த காட்சிகளில் வந்தாலும் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். மறைந்த செல்வகுமார் காவல்துறை அதிகாரியாக வந்து ரசிக்க வைக்கிறார். காதல் சுகுமார் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை. மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
1970-களில் ஒரு மலைவாழ் கிராமத்தை பின்னணியாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கிட்டு. பெண்களுக்கு எதிரான அநீதிகள், அதை எதிர்த்து போராடும் பெண்களின் சக்தி, ஒரு மர்ம கொலை மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியங்கள் ஆகியவற்றை சொல்லி இருக்கிறார். சில இடங்களில் சுவாரஸ்யமாக நகரும் திரைக்கதை, பல இடங்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
படத்தின் முதல் பாதி முழுவதும் மர்மம் நிறைந்த சூழல் உருவாக்கப்பட்டாலும், திரைக்கதை மெதுவாக நகர்வது பொறுமையை சோதிக்கிறது. இரண்டாம் பாதியிலும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் போகிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் முக்கியமான விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்காமல் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டத்துடன் முடித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சிபி, மலைப்பகுதியின் இயற்கை அழகை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
இசை
இசையமைப்பாளர் தீசனின் பின்னணி இசை சில இடங்களில் கதைக்கு உதவினாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.